அதிக பயணங்களை மேற்கொள்ளும் முக்கிய நகரமாக கோவை!

– தாமஸ் குக் நிறுவனம் தகவல்

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிக பயணங்கள் மேற்கொள்ளும் முக்கிய நகரமாக கோவை உள்ளது என்று இந்தியாவின் முன்னணி பயண சேவை நிறுவனமான தாமஸ் குக் (இந்தியா) நிறுவனம் தெரிவித்துள்ளது.

18 மாத கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின், மாநில எல்லைகள் திறக்கப்பட்டது மற்றும் தடுப்பூசி போடுதல் போன்ற நேர்மறையான நடவடிக்கைகள் காரணமாக கோவை நகர மக்களிடையே பயணம் மேற்கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது.

இது ஊரடங்கு தளர்த்தப்பட்ட ஜூன் மாதத்தில் இருந்து மாதந்தோறும் அதிகரித்து தற்போது 68 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது உள்நாட்டு பயணத்தில் 290 சதவீதமாகவும் சர்வதேச பயணத்தைப் பொறுத்தவரை 60 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. துபாய் எக்ஸ்போ 2020 காரணமாக தற்போது மாலத்தீவு, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், துருக்கி, எகிப்து, ரஷ்யா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகள் கோவை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான இடங்களாக உள்ளன. திருமணம், தேனிலவு போன்றவற்றிற்கான பயணங்களும் அதிகரித்திருப்பதாக இந்நிறுவனம் கூறியுள்ளது.

தாமஸ் குக் இந்தியா நிறுவனம் தமிழகத்தில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தும் விதமாக சென்னை, மதுரை, புதுச்சேரி மற்றும் திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் 11க்கும் மேற்பட்ட சொந்தமான பயண ஏற்பாட்டு மையங்கள் மற்றும் முகவர்களைக் கொண்டுள்ளது. சேலம் நகரம் ஒரு பிரத்யேக அந்நிய செலாவணி நகரமாக செயல்படுகிறது என்றும், ஈரோடு, திருப்பூர், ஊட்டி மற்றும் பொள்ளாச்சி போன்ற நகரங்களின் மையமாக கோவை உள்ளது என்றும் இந்த பகுதியில் உள்ள மக்கள் பயணங்களில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருவதாகவும் இந்நிறுவனம் கூறியிருக்கிறது.

இது குறித்து (தாமஸ் குக் (இந்தியா) நிறுவனத்தின் பொழுதுபோக்கு பயணப் பிரிவின் துணைத் தலைவர் சந்தோஷ் கண்ணா கூறுகையில்: 18 மாதங்களுக்குப் பிறகு தங்கள் வீடுகளில் இருந்து வெளி இடங்களுக்கு செல்ல கோவையில் உள்ள வாடிக்கையாளர்களில் 68 சதவீதம் பேர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் உள்நாடு மற்றும் மாலத்தீவுக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஐரோப்பா, துருக்கி மற்றும் துபாய் எக்ஸ்போ 2020 ஆகியவை குடும்பத்தினர். புதுமணத் தம்பதி மற்றும் மாணவர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

நடப்பு ஆண்டின் 4வது காலாண்டில் சுற்றுலாவைத் துரிதப்படுத்தும் விதமாக பண்டிகை மற்றும் குளிர்கால மற்றும் குழு சுற்றுலாவுக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளோம். இதில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், குடும்பத்திற்கான தள்ளுபடி, ஆரம்ப நிலை சிறப்பு சலுகைகள் மற்றும் தொகுப்புகள் உள்ளிட்டவை அடங்கும் என்று தெரிவித்தார்.