ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் தொடங்கிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் திங்கட்கிழமை அன்று நேரடியாக நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் மக்களிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை வாங்கும் நடைமுறை நிறுத்தப்பட்ட நிலையில் பொது மக்கள் மனுக்களை பெட்டியில் தான் இட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று முதல் மீண்டும் மக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நடைமுறை தொடங்கியது.

இதனால் மாவட்ட ஆட்சியர் மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று கொண்டார். இனி வரும் நாட்களில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இந்த நேரடி குறைதீர் முகாம் நடைபெறும்.

நீண்ட நாட்களுக்கு பின் நேரடி மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரடியாக மனு அளிப்பது நம்பிக்கை அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.