லடாக் எல்லையில் சீன வீரர்கள் தங்குமிடம்: பாதுகாப்பு பணியில் இந்திய வீரர்கள்

லடாக் யூனியன் பிரதேத்தின் எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே, சீனா தனது ராணுவ வீரர்களுக்கு கொள்கலன் மூலம் தங்குமிடங்களை அமைத்துள்ளது சமீபத்திய கண்காணிப்பு மற்றும் உளவுத்துறையின் அறிக்கையின்படி தெரியவந்துள்ளது.

தாக்குதல்களை எதிர்கொள்ளும் விதமாக ஏவுகணைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. டாஷிகோங், மான்சா, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் சுருப் போன்ற இடங்களின் அருகே தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தங்குமிடங்கள் மட்டுமல்லாது, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட, நிலத்தில் இருந்தபடி வானில் பறப்பவற்றை தாக்கவல்ல எஸ்400 ஏவுகணைகள் இரண்டையும் எல்லையில் சீனா நிலைநிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேபோல், விமான ஓடுதளங்கள், வான் பாதுகாப்பு கட்டமைப்புகளையும் சீனா உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் சீனா இடையே பல ஆண்டுகளாகவே எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்சனை அண்மை காலமாக தீவிரமடைய தொடங்கியுள்ளது. எல்லையில் உள்ள நதிகள் கோடையில் ஒரு பகுதியில் குளிர்காலத்தில் வேறு பகுதியிலும் ஓடக்கூடும். நதிகளின் ஓட்டத்தை வைத்து எல்லை பிரிக்கப்பட்ட நிலையில், கோடுகள் மாறுவதால் எல்லை பிரச்சனையும் அவ்வப்போது தோன்றி வருகின்றன.

லடாக்கில் பாங்காங் ஏரி பகுதிகளில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை குவித்தது. இதை தொடர்ந்து ஜூன் 15ம் தேதி கால்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு படை வீரர்களும் மோதிக்கொண்டனர். இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

இதற்கிடையே, இரு தரப்பிற்கு இடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், படையை திரும்பபெற இந்தியா- சீனா ஒப்புக்கொண்டன. தற்போது மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் (line of actual control -Lac) இரு நாட்டு தரப்பையும் சேர்ந்த 50 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.