புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் கொடிசியா புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொடிசியாவின் (CODISSIA Defence Innovation and Atal Incubation Centre – CDIIC) சார்பில் இந்திய இராணுவத்துக்கு தேவையான உள்நாட்டு தயாரிப்புகள் குறித்த காட்சி விளக்கமும், புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றமும் காணொலி மூலம் நடைபெற்றது.

கடந்த மாதம் 19 அன்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்த  இராணுவம் மற்றும் வான்வெளித் துறைகளில் புத்தாக்கங்களை வளர்த்தெடுக்கவும், தொழில்நுட்ப மேம்பாடு தன்னிறைவு காணவும் உதவுகின்ற உள்நாட்டுத் தயாரிப்புகள் குறித்த காட்சி விளக்கம் (5.0)ன் தொடர்ச்சியே இந்த நிகழ்வு ஆகும்.

இந்த நிகழ்வில் CDIIC இயக்குநரும், கொடிசியா தலைவருமான எம்.வி.ரமேஷ் பாபு வரவேற்புரை வழங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் CDIIC ன் பணிகள் குறித்து அதன் இயக்குநரும், கொடிசியா முன்னாள் தலைவருமான இயக்குநர் சுந்தரம் அறிமுக உரை நிகழ்த்தினார்.

பெங்களூர், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் ராஜசேகர் கருத்துரை வழங்கினார். மத்திய பாதுகாப்புத் துறை புத்தாக்க நிறுவன திட்ட அதிகாரி விஷ்ணு பிரதாப் உரை வழங்கினார்.

இதுகுறித்த பத்திரிக்கை செய்தியில்: பாதுகாப்புத் துறை சார்ந்த புத்தாக்கம் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவு தரும் வகையில் Idex மூலம் தேவையான உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பெறுவதற்கு 1000 கோடி ரூபாய்க்கு 2021 – 2022ம் ஆண்டுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுமார் 300 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவு தரவும், இதுசார்ந்த புத்தாக்க முயற்சிகளை வளர்த்தெடுக்கவும் 498.80 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ புத்தாக்க மையம் இராணுவத்துக்கான உள்நாட்டுத் தயாரிப்பில் எடுத்த கொடிசியாவின் CDIIC முன் முயற்சிகளைப் பாராட்டியது.

கொடிசியாவின் CDIIC யானது, இராணுவ புத்தாக்க மையம் மற்றும் அதன் Idex மற்றும் DRDO ஆகியவற்றின் தொழில் வளர்த்தெடுப்பு மையங்களுடன் இணைந்து, உள்நாட்டு தயாரிப்புக்கான ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் வகையில் செயல்படும்.

நான்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நிகழ்வில் கலந்து கொண்டதோடு, CDIICன் தொழில் வளர்த்தெடுப்பு மையத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர். விழாவில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் தொழில் வளர்த்தெடுப்பு மைய மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக DRDOன் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், மற்றும் இராணுவ புத்தாக்க மையம் இணைந்து, கொடிசியாவின் CDIIC மையமானது கோவையை ஒரு இராணுவ தளவாட தயாரிப்பு மையமாக உருவாக்கும் பணியில் ஈடுபட ஒப்புக்கொண்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.