ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை இயக்க அலுவலர் ஸ்வாதி ரோஹித் விழாவிற்கு தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், புதுடெல்லி யுபிஎஸ்சி யின் மேனாள் உறுப்பினரும், தற்போதைய இ.பி.ஜி பவுண்டேசனின் தலைவர் பாலகுருசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில்: சமூக முன்னேற்றத்திற்கு கல்வியே முதுகெலும்பாக விளங்குகிறது. அதற்கு ஆசிரியர்களே அடிப்படை ஆதரமாகத் திகழ்கின்றனர். இதேபோல் பொருளாதார வளர்ச்சியும் கல்வியைச் சார்ந்தே அமைகிறது. நாட்டைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதற்கு மாணவர்களின் பங்கும் இங்கே குறிப்பிடத்தக்கது.வகுப்பறை ஒவ்வொரு நாளும் மேம்பட வேண்டும். அதுதான் சிறந்த கற்பித்தலாக அமையும் எனப் பேசினார்.

அதைத்தொடர்ந்தது சிறந்த ஆசிரியர்களுக்கான விருதும், சிறந்த துறைக்கான விருதும் வழங்கப்பட்டது. சிறந்த ஆசிரியருக்கானத் தேர்வில் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முத்துலிங்கம் முதலிடத்தையும், அதே துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் கீரிஸ்மா இரண்டாமிடத்தையும், கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் பிரனீஷ் மூன்றாமிடத்தையும் பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு விருந்தினர் ரொக்கப்பரிசும், கேடயமும் வழங்கி கவுரவித்தார்.

இதே போன்று சிறந்த துறைக்கான விருதை கணினி அறிவியல் துறை பெற்றது. இத்துறையின் தலைவர் மரிய பிரசில்லா மற்றும் பேராசிரியர்களுக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசும், கேடயமும் வழங்கி சிறப்பு விருந்தினர் கவுரவித்தார்.

விழாவில் துணை முதல்வர், தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், முதன்மையர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.