பேரூர் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

அமாவாசையை முன்னிட்டு அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்க பேரூர், மருதமலை உள்ளிட்ட 4 கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாகக் கோயில்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில் நடை மூடப்படும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 1 ம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமாவாசை நாளான செப்டம்பர் 6 ம் தேதி கோயில்களில் அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இந்தக் கோயில்களில் சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்” என்று ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.