ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மையியல் புலம் ஏஐசிடிஇ பயிற்சி மற்றும் கற்றல் (AICTE Training and Learning) அகாடெமி நிதியுதவியுடன் ‘ஜென் இசட்(Gen Z) மாணவர்களுக்குப் புதுமையான கல்வி சார் கற்பித்தல் மற்றும் கற்றல்’ என்ற தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை நடத்துகிறது.

இந்நிகழ்வானது செப்டம்பர் 06 முதல் செப்டம்பர் 10 வரை என 5 நாட்கள் இணைய வழியாக நடைபெறுகிறது. திங்கட்கிழமையன்று நடைபெற்ற தொடக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் உயர்கல்வி துறையைச் சார்ந்த துறைசார் வல்லுநர்கள் பயிற்றுவிப்பதற்குரிய இ – உள்ளடக்க தகவல்களை வெளியிட்டார்.

கல்லூரியின் கல்விப் புலமுதன்மையர் ஹேனா ரேவதி, மேலாண்மையியல் புலஇயக்குநர் பாமினி ராஜசேகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பர்வின்பானு ஆகியோர் பங்கேற்றனர்.

இப்பயிற்சியின் அமர்வுகள் மெய்நிகர் ஆய்வகங்கள், கலப்பு கல்வி முறை, கற்பித்தல் கற்றல் பின்னணியில் நரம்பியல், கல்வி முறைமைகள், கல்வி குறித்த ஆய்வுகள், பணித்தாள் அடிப்படையிலான கற்றல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய கல்விச் சூழலை மையப்படுத்தி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இத்தகைய நிகழ்வினை முன்னெடுத்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் டெல்லி, மும்பை, கர்நாடகா, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், புனே, கேரளா, மகாராஷ்டிரா, கோவா, பஞ்சாப் போன்ற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200 – க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இணைய வழியில் பங்கேற்று சிறப்பித்தனர்.