கனவும்… நம்பிக்கையும்…!

நம் மனதினுள் அடைத்து வைக்கப்பட்ட உணர்ச்சிகளே இரவு நேரங்களில் கனவாக தோன்றுகின்றன என உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அவ்வாறாக தோன்றும் கனவுக்கும், எதிர்காலத்தில் நடக்க போகும் நிகழ்வுகளுக்கும் தொடர்புண்டு என பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை இப்போது மட்டுமில்லை, சங்ககாலத்தில் இருந்தே கனவு குறித்தான நம்பிக்கைகள் நிலவி வருகிறது. பிறரிடம் கண்ட கனவினை சொல்ல முற்படும்போது நமது நினைவில் துல்லியமாக அவை பதியாத காரணத்தினால் விரிவாக கூட நம்மால் சொல்ல முடியாது.

கனவில் தோன்றுகின்ற விஷயங்களின் அடிப்படையில் நல்ல கனவு, கெட்ட கனவு என பாகுபடுத்தப்படும். அதிலும் வேடிக்கையான நிகழ்வு என்னவென்றால் நம் கனவில் நல்லது நிகழ்ந்தால் வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாகத் தீயது நடக்கும். கனவில் தீயது நிகழ்ந்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும். இது கனவு நம்பிக்கைகளுக்கு உரிய தன்மையாக கருதப்படுகிறது. திருமணம் பற்றிக் கனவு வந்தால் தீயது நடக்கும்,
கனவில் தாமே இறந்துவிட்டதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும், மரணத்தைக் கனவில் கண்டால் சுகமாகும் என கனவு குறித்த நம்பிக்கைகளோ ஏராளம்.

அனுபவ ரீதியிலான நிகழ்வுகளின் வாயிலாக, கனவுகளை குறித்த பல்வேறு கற்பிதங்கள் வழிவழியாக, நம் சமூகத்தில் உலா வருகிறது. இந்த நம்பிக்கைகள் அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும் அதைப் பற்றிய புரிதல்கள் அவசியமாகின்றன.

“கனவுகள் கடவுளாலோ, கடவுடள் தன்மை உடையவர்களாலோ ஏற்படுபவை அல்ல. மனித உள்ளத்தில் இயல்பாகத் தோன்றுவனவே” என்கிறார் அரிஸ்டாட்டில்.

மனம் பெரும்பாலும் எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறதோ, அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பு, சிதறல்கள், இரவில் அவர்களுக்கு கனவாக வருகிறது என மன நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நாம் காணும் கனவுக்கும், வயதிற்கும் சம்பந்தம் உண்டு. குழந்தைகளுக்கு பெரும்பாலும் அவர்களைப் பெரிதும் ஈர்க்கும் கார்ட்டூன் உருவங்கள் மற்றும் திரைப்படங்களில் வரும் கதாநாயகன், வில்லன் போன்ற கதாபாத்திரங்கள், கனவில் வரும்.

இளமைப் பருவத்தில் இயல்பாகவே மனம் ஒரு இடத்தில் நிலை கொள்ளாது. ஆசைகள் அலை மோதிக்கொண்டிருக்கும். இந்தப் பருவத்தினருக்கு தங்களுக்கு பிடித்தமான, எதிர் பாலினரே அதிகம் கனவில் வருவர். பிள்ளைகளின் எதிர்காலம், வேலைவாய்ப்பு, திருமணம் பற்றி அதிகம் எண்ணும் நடுத்தர வயதினருக்கு இது தொடர்பான, நேர்மறை அல்லது எதிர்மறையான கனவுகள் வரும்.

உளவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மனித மனம் கனவின் மீது கொண்டுள்ள சில நம்பிக்கைகள் நிகழ்காலத்திலோ, வருங்காலத்திலோ பொருத்தி பார்க்க கூடிய ஒன்றாகவே கருதப்படுகிறது.