2026 சட்டப்பேரவை தேர்தல்: காயா? பழமா?

தனியார் தொலைக்காட்சிக்கு அண்மையில் பேட்டி அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக அரசைப் பெரிதும் பாராட்டியிருந்தார். குறிப்பாக வேளாண் துறைக்கு தனி நிதி அறிக்கை என்பதை பெரிதும் பாராட்டி இருந்தார்.

மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஆகியோரின் பேரவைத் தேர்தல் நேரத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது தற்காலிகமானது எனக்கூறியது குறித்து கருத்து கேட்கும்போது சமூகநீதி சார்ந்த அறிவு அவர்களுக்கு இல்லை என்று விமர்சனம் செய்தார்.

அதேவேளை அதிமுக கூட்டணியில் உறுதியாக இருப்பதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டார். நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக கூட்டணி தொடரும் என்று அறிவித்த ராமதாஸ், அடுத்த 2026 பேரவைத் தேர்தலில் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற கோஷத்தை முன்னெடுக்கப் போவதாகவும், அடுத்து பாமக ஆட்சிதான் என்றும் கூறியிருந்தார்.

இடையில் நடைபெறும் 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணி பற்றி கேட்டபோது, செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார். இரண்டு கூட்டணிக்கும் தான் தயார் என்பதை வெளிப்படுத்தியிருந்தார். 2019 மக்களவைத் தேர்தல், 2021 பேரவைத் தேர்தல் என இரு முறை அதிமுக கூட்டணி தொடர்ந்து தோல்வி அடைந்ததால், மீண்டும் அதே கூட்டணியில் தொடர வேண்டுமா என்ற கேள்வி ராமதாஸ் மனதில் எழுந்திருக்கக்கூடும். அதனால்தான் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை.

ஓபிசி விஷயத்தில் பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார் என்றும், நீட் விஷயத்தில் அவரது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் கருத்து தெரிவித்திருந்தார். அதேவேளையில் ராகுல் காந்தி சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், அவரது வேகம் போதவில்லை என்றும் அவரது கட்சிக்காரர்களே நினைப்பதாகவும் கூறியிருந்தார். இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் என இரு கூட்டணிக்கான கதவுகளையும் ராமதாஸ் திறந்து வைத்திருப்பது தெளிவாகிறது.

ஆனால், 2026 பேரவைத் தேர்தலில் தெளிவாக முடிவு செய்துவிட்டார். வன்னியர்களுக்கான 10.5 சதவீதத்தை ஸ்டாலின் கொடுத்துவிட்டதால் அதை வைத்து இனிமேல் அரசியல் செய்ய இயலாது என எண்ணிவிட்டார் ராமதாஸ். வன்னியர் வாக்கு வங்கியை தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சியோ அல்லது இந்துத்துவா வாக்கு வங்கியை முன்னிறுத்தும் பாஜகவோ கவர்ந்து விடக்கூடாது என்ற எண்ணம் அவரது மனதில் உள்ளது. இதை முறியடிக்கவே மாற்றம், முன்னேற்றம் என்னும் கோஷத்தை மீண்டும் எழுப்பியுள்ளார். ராமதாஸின் இந்த பாமக ஆட்சிக் கனவு பலிக்குமா அல்லது பகல் கனவாகவே மாறிவிடுமா என்பதைக் கடந்த கால தேர்தல் அரசியல் முடிவுகளை பார்க்கும்போது துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்ற கோஷத்துடன், பல்வேறு சாதி சங்கங்களையும் ஒருங்கிணைந்து சென்னையில் 16.7.1989ல் பாட்டாளி மக்கள் கட்சியை (பாமக) தொடங்கினார். 1989ல் முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் 36 தொகுதிகளில் அந்தக் கட்சி போட்டியிட்டபோது, எதிலும் வெற்றிபெற முடியாமல், 6 சதவீத வாக்குகளைப் பெற்று அரசியல் சக்தியாக பாமக உருவெடுத்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை காரணமாக அனுதாப அலை வீசிய 1991 பேரவைத் தேர்தலில்கூட பாமக தனித்துப் போட்டியிட்டு 5.9 சதவீத வாக்கு வங்கியுடன் ஒரு தொகுதியை வென்றது. 1996 மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் முதல்முறையாக வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 20 மக்களவைத் தொகுதிகள், 104 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஆண்டிமடம், பென்னாகரம், எடப்பாடி, தாரமங்கலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1998 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து 5 தொகுதிகளைப் பெற்று, அவற்றில் சிதம்பரம், வந்தவாசி, வேலூர், தருமபுரி ஆகிய 4 தொகுதிகளில் பாமக வென்றதுடன் 6 சதவீத வாக்கு வங்கியையும் பெற்றது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் பாமகவுக்கு கிடைத்த முதல் வாய்ப்பை சிதம்பரம் தொகுதியில் தேர்வான ஏழுமலைக்கு ராமதாஸ் வழங்கினார்.

வாஜ்பாய் அமைச்சரவை 13 மாதங்களில் கவிழ்ந்தபோது, 1999 மக்களவைத் தேர்தலில்அதிமுக கூட்டணியில் இருந்து மாறி திமுகவுடன் கைகோர்த்து 8 தொகுதிகளில் (புதுவையையும் சேர்த்து) போட்டியிட்டதில் 5ல் வென்றதுடன் 8.2 சதவீதமாகவும் தனது வாக்கு வங்கியை உயர்த்தியது பாமக. மீண்டும் அமைந்த வாஜ்பாய் அமைச்சரவையில் ஏ.கே.மூர்த்தி, என்.டி.சண்முகம், பட்டியலினத்தைச் சேர்ந்த இ.பொன்னுசாமி ஆகிய மூவர் அமைச்சர்களாக அங்கம் வகித்தனர்.

1998ல் அதிமுக அணிக்கு 30 தொகுதிகள், 1999 தேர்தலில் திமுக அணிக்கு 26 தொகுதிகள் என பாமக அங்கம் வகித்த அணிக்கே பெரும்பான்மை தொகுதிகள் கிடைத்தன. இதன்மூலம், வட மாவட்டங்களில் பாமக இன்றி எந்தக் கூட்டணியும் வெற்றி பெற முடியாது என்ற கருத்துருவாக்கம் தமிழக அரசியலில் உருவானது.

திடீரென மத்திய அமைச்சரவையில் இருந்தும், திமுக கூட்டணியில் இருந்தும் விலகி, 2001 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளைப் பெற்று 5.6 சதவீத வாக்குகளுடன் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று பாமகவின் வளர்ச்சிக்கு அடுத்தகட்ட வியூகத்தை வளர்த்தார் ராமதாஸ்.

2004ல் நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் திமுக அணிக்கு தாவிய பாமக, 6.7 சதவீத வாக்குகளுடனும், போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மாநிலங்களவை எம்.பி.யாகி  மத்திய சுகாதாரத் துறை அமைச்சரானார் அன்புமணி ராமதாஸ். இந்தத் தேர்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பாமகவுக்கு எதிராக தனித்துப் போட்டியிட்ட திருமாவளவன் 2,55,773 வாக்குகள் பெற்று அதிமுக, திமுக கவனத்தை ஈர்த்தார்.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு விசிக தாவிய நிலையில், திமுக கூட்டணியில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளை பாமக வென்றது. வாக்கு வங்கியை (5.6 சதவீதம்) பாமக இழக்காவிட்டாலும், 2001 தேர்தலைவிட  2 தொகுதிகள் குறைவாகவே பாமகவால் பெற முடிந்தது.

2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு மாறி, 7 தொகுதிகளில் போட்டியிட்டது பாமக. ஆனால், வட மாவட்டங்களில் பட்டியலின மக்களின் வாக்கு வங்கி பாமகவுக்கு எதிராகத் திரும்பியதால், போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பாமக தோல்வியடைந்தது. திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பாமகவைத் தோற்கடித்தார்.

விசிகவைப் பயன்படுத்தி பாமகவை அரசியல் ரீதியாக வீழ்த்த அதிமுக, திமுக வியூகம் அமைத்துவிட்டதை உணர்ந்த ராமதாஸ், திருமாவளவனுடன் கைகோர்த்து தனது அரசியல் வியூகத்தை மாற்றிக்கொண்டார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக, விசிக இணைந்தாலும், அது எலி – தவளை நட்பாகவே இருந்ததை தேர்தல் முடிவு உணர்த்தியது. 30 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. ஆனால், பாமக 5.2 சதவீத வாக்குகளைப் பெற்று தனது வாக்கு வங்கியை மட்டும் தக்கவைத்துக் கொண்டது.

மீண்டும் விசிகவுக்கு எதிராகவும், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்ற வியூகத்தில் இருந்த ராமதாஸ்க்கு 2014 மக்களவைத் தேர்தல் கைகொடுத்தது. தமிழகத்தில் முதல் முறையாக வலுவான மூன்றாவது அணியில் பாஜக, தேமுதிக, மதிமுகவுடன் பாமகவும் இணைந்தது. அப்போது ஒரு தொகுதியில் அதாவது, தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார். பாமகவும் 4.4 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றது.

மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காதது, அன்புமணியை முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்றுக்கொள்ளாதது ஆகிய காரணங்களால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற கோஷத்துடன் முதல்முறையாக தொழில்நுட்ப (டிஜிட்டல்) பிரசார முறையில் 2016 தமிழக பேரவைத் தேர்தலில் தனித்து களம் இறங்கியது பாமக.

முதல்வர் வேட்பாளரான அன்புமணி தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் 2வது இடத்தையே பெற முடிந்தது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவினாலும் 5.36 சதவீத வாக்கு வங்கியுடன் பாமக அரசியல் சக்தியாகவே தொடர்ந்தது.

2019 மக்களவைத் தேர்தலில், திமுகவுக்கு எதிராக பெரிய அணியை கட்டமைக்க வேண்டிய நெருக்கடி, டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுகவின் வளர்ச்சியை மட்டுப்படுத்த வேண்டியது என பல்வேறு தேவை அதிமுகவுக்கு இருந்த நிலையில், அதை பாமகவும் சாதுர்யமாக பயன்படுத்தி மீண்டும் கூட்டணியாக களத்தில் இறங்கினாலும் மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பாமக தோல்வி அடைந்தது.

தனக்கு செல்வாக்கு மிகுந்த தருமபுரி தொகுதியைகூட பாமக இழந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் தருமபுரியில் வெற்றி பெற்ற அன்புமணி 42.51 சதவீத வாக்குகளையும், 2வது இடம்பிடித்த அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.மோகன் 35.51 சதவீத வாக்குகளையும், திமுக வேட்பாளர் ஆர்.தாமரைச்செல்வன் 16.37 சதவீத வாக்குகளையும் பெற்றனர். ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் திமுக 56.16 சதவீத வாக்குகளை பெற்றது. அதிமுக, பாஜக கூட்டணியில் அன்புமணி 41.12 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார்.

2014ல் மூன்றாவது இடத்தில் இருந்த திமுக, 2019 தேர்தலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த கட்சிகளின் கிட்டதட்ட 40 சதவீத வாக்குகளையும் கவர்ந்திழுத்து முதலிடத்துக்கு முன்னேறியதற்கு பாமகவின் அடையாள அரசியல் எதிர்ப்புதான் முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது. 2014 தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் சிதறியதால் அன்புமணி எளிதாக வெற்றி பெற முடிந்தது.

2019ல் இருமுனைப் போட்டியில் பட்டியலின, பிற்பட்டோர் வாக்குகள், திமுக அணிக்கு ஒருமுகமாக குவிந்ததால் பாமக தோல்வியைத் தழுவியது. இருந்தாலும், பாமகவின் வாக்கு வங்கியில் பெரிய அளவில் சேதாரமாகவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

2021ல் அதிமுக கூட்டணியைத் தொடர்ந்த பாமக, 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும் வடமாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்கு பாமகவால் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்க முடியாவிட்டாலும், குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி அதிமுகவுக்கு கிடைக்க உதவியது.

இருப்பினும் பாமக இன்னமும் தோல்வி வளையத்தில்தான் உள்ளதாகத்  தெரிகிறது. இதில் இருந்து தப்பிக்கவே அடுத்து திமுக கூட்டணியில் இணைய ரகசிய அரசியல் நகர்வை பாமக  செய்திருக்கலாம். இருப்பினும், பாமகவை அணியில் சேர்த்தால் அது திமுகவுக்கு வடமாவட்டங்களில் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் ராமதாஸின் அரசியல் நகர்வை ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை எனத்தெரிகிறது.

குறிப்பாக 2016, 2019, 2021 ஆகிய தேர்தல்களில் ஸ்டாலினுக்கு எதிராக ராமதாஸ் வியூகம் வகுத்ததால், பாமகவின் வாக்கு வங்கி ஸ்டாலின் எதிர்ப்பு வாக்கு வங்கியாகவே இப்போதும் நீடிக்கிறது. எனவே, திமுக வாக்கு வங்கியும் வடமாவட்டங்களில்  தாழ்த்தப்பட்ட சமூகத்தின் வாக்கு வங்கி, சிறுபான்மையினர் வாக்குகள், சில பிற்பட்டோர் சமூக வாக்குகள் ஆகியவை திமுகவின் வாக்கு வங்கியாக இருப்பதால் திமுக – பாமக கூட்டணி என்பது தண்ணீரும், எண்ணெயும் போல பொருந்தாக் கூட்டணியாகவே மாறும் வாய்ப்பு உள்ளது. இதை ஸ்டாலின் நன்கு புரிந்துகொண்டு பாமகவை திமுகவுடன் நெருங்கவிடாததால் அடுத்து பாமக ஆட்சி என்ற அரசியல் நகர்வை செய்துள்ளார் ராமதாஸ்.

2009, 2011, 2016, 2019, 2021 என 12 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் தொடர் தோல்வியைச் சந்தித்த பாமக தோல்வி வளையத்தில் இருந்து மீண்டு வர புதுப்புது வியூகங்களை வகுத்து வருகிறார் ராமதாஸ். ராமதாஸின் வியூகம் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது:

தற்போது டாக்டர் ராமதாஸ் திமுக அணியில் சேரும் இடத்தில் இருந்தாலும் அதற்கான நடைமுறை சாத்தியக்கூறுகள் குறைவு என்பதால் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அண்ணா திமுக கூட்டணியில் நீடிக்கும் முடிவை எடுத்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்த சமயத்தில் காற்று யார் பக்கம் வீசுகிறது அந்த அணியில் சேர்ந்து விடலாம் எனும் எண்ணத்தில் இருக்கிறார்.

அதன்பின் வரும் சட்டமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலின் முடிவைப் பொறுத்து வியூகம் வகுக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்குள் நாம் தமிழர் சீமான் அல்லது பாஜகவின் அண்ணாமலை போன்ற தலைவர்கள் தமிழ் தேசியம் அல்லது இந்துத்துவா போன்ற கருத்தியலை முன்னிறுத்தி, வன்னியர் ஓட்டு வங்கியை பெற்றுவிடுவார்களோ என்ற அச்சம் ராமதாசுக்கு உள்ளது.

அதன் விளைவாகவே எண்ணங்களில் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற கோஷத்தை முன்வைக்கிறார். 30 ஆண்டுகால கரடுமுரடான அரசியல் பாதையை கடந்து வந்த டாக்டர் ராமதாஸ் அடுத்து வரும் மூன்று ஆண்டு காலத்தில் எப்படி விளையாடப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.