தலிபான் ஆட்சி: இந்தியாவிற்கு ஆபத்தா?

கடந்த வாரத்தில் உலகின் முக்கிய நிகழ்வாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசு அதிகாரத்தைக்  கைப்பற்றியதை பலரும் குறிப்பிடுகிறார்கள். அங்கிருந்த அமெரிக்கப் படைகளின் கடைசி அணி வெளியேறியது, கூடவே ஆப்கன் அதிபர் வெளிநாட்டுக்குத் தப்பியது, தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியது எல்லாம் ஒரே சமயத்தில் நடந்திருக்கிறது. மேற்கு நாடுகள் பலவும் இதனை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள். ஐ.நா.சபையும் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது.

உலகெங்கும் நடைபெறும் பலவிதமான ஆட்சி மாற்றங்களைப் போல அல்ல இது. ஏனென்றால் இப்போது அதிகாரத்துக்கு வந்திருப்பவர்கள் தலிபான்கள். இவர்களை இஸ்லாமிய அடிப்படை வாதத்தை வலுக்கட்டாயமாக கடைப்பிடிக்கச் செய்பவர்கள் என்று சொல்லலாம். நிகழ்காலத்தில் பல பழமை வாதங்களை நடத்திக்காட்ட முயற்சிப்பவர்களாக அவர்களின் கடந்த காலம் கூறுகிறது. இன்னொரு பக்கம் ஆயுதமேந்திய போராட்டக் குழுக்களுக்கு அவர்கள் அளித்து வந்த ஆதரவு. இவை இரண்டும் சேர்ந்து உலக நாடுகளிடையே ஒரு அச்சத்தை உருவாக்கி இருக்கின்றன.

தற்போதுள்ள ஆட்சியை தலிபான் 2.0 என்று கொள்வோமேயானால், இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தலிபான் 1.0 மிகவும் மோசமான காலகட்டம் என்றே கூற வேண்டும்.

குறிப்பாக பெண்ணடிமைத் தனம் என்பது இவர்களின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக இருக்கிறது. பெண்கள் பணிக்கு செல்லாமல் தடுக்கப்படுவது, ஆண் துணை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது, கட்டாய முகத்திரை என்று தற்போதைய சூழலுக்கு பொருந்தாத பல நிகழ்வுகள் நடைபெற்றன. தொலைக்காட்சி, இசை, உள்ளிட்ட கலை சார்ந்த நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டிருந்தன. ஆப்கானிய சமூகத்தை பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லும் நிகழ்வுகளாகவே இவற்றைக் கருத வேண்டி இருக்கிறது.

இல்லை அப்படி எல்லாம் இல்லை, தலிபானின் புதிய அரசாங்கம் புதிய முறையில் செயல்படும். உலக நாடுகளுடனும் மோதல் போக்கை கடைபிடிக்காது, உள்ளூரிலும் அமைதியைப் பேணும் என்று செய்திகள் வந்தாலும் நிலைமை தெளிவாகத் தெரிவதற்கு சில வாரங்களாகும். ஆனாலும் சில நெருடல்கள் உடனே தென்படத்தான் செய்கின்றன.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் அதிகாரத்தில் இருந்த போது பாமியானில் இருந்த ஹசாரா சமூகத்தலைவர் அப்துல் அலி மஸாரியைத் தூக்கில் இட்டது,  புத்தர் சிலையை உடைத்து தகர்த்தது எல்லாம் நடந்தது. இப்போது ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இன்னும் ஈரம் காயாத நிலையில் சாஹர்ஹிந்த் என்ற மாவட்டத்தின் ஆளுநராக இருந்த பெண்ணை கைது செய்து வைத்துள்ளனர்.

ஹசாரா சமூகத்தினர் வசித்து வரும் பகுதியில் உள்ள அப்துல் அலி மஸாரியின் சிலையை தகர்த்துள்ளதும் தெரியவருகிறது. இது ஆங்காங்கே இந்த அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வா, அல்லது வரப்போகும் இவர்களின் ஆட்சிக்கு ஒரு அச்சாரமா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இது போக பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தலிபான் ஆட்சியைப் பற்றி பெரிய அளவில் குறை கூறுவதாக தெரியவில்லை. இந்தியா இன்னும் தன்னுடைய முழு முடிவை அறிவிக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாறுதலை, சூழ்நிலையைக் கூர்மையாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார். என்றாலும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்களில் பலரை விமானம் மூலமாக இந்தியாவிற்கு கொண்டுவரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியாவுக்கு இந்த ஆப்கன் ஆட்சிமாற்றம் இரண்டு வகையில் முக்கியமானது. தற்போது பதவியைப் பிடித்துள்ள தலிபான்கள் என்பவர்கள் இஸ்லாமிய அடிப்படை வாதக்குழுக்கள் என்ற வகையில் முன்பு போல தீவீரவாதத்துக்கு ஆதரவு தந்தால் அதனால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அடுத்து இதன் எதிரொலியாக ஒரு பாவமும் அறியாத இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. எங்கோ யாரோ நடத்தும் வன்முறைச் செயல்களுக்கு இவர்கள் இங்கிருந்து கொண்டு  பலியாகி விடக்கூடாது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டினர் வேகமாக வெளியேறி வருகின்றனர். இனி தலிபான்கள் ஆட்சி நிலைபெற்று, உலக நாடுகளிடம் அங்கீகாரம் பெற்று வளர்ச்சி அடைவது என்பது இன்னும் பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு உலகநாடுகள் ஒருங்கிணைந்து ஆப்கன் மக்கள் நலனை முக்கிய குறிக்கோளாக கொண்டு தலிபான் ஆட்சி அமையும் வகையில் நெருக்குதல்களைத் தரவேண்டும். எந்த வகையிலும் தீவிரவாதச் செயல்களுக்கு அவர்கள் துணை போகாத வண்ணம் கண்காணித்து உலக அமைதியைப் பேண வேண்டும்.

இதில் உலக அளவில் உள்ள முஸ்லிம்களுக்கும் பெரும்பங்கு உண்டு. ஏனென்றால் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் இதுபோன்ற அடிப்படை வாதமானது, தீவிரவாதமாக மாறி, உலக அளவில் வசித்து வரும் இஸ்லாமியர்களுக்கும் தீமை விளைவிப்பதாகவே அமையும். எனவே இது குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, தகவமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் மற்ற நாடுகளின் பாதுகாப்புக்கும்  ஒரு பெரிய அச்சுறுத்தலாக அமையும். ஐ.நா.சபையும், உலகநாடுகளும் அவ்விதமாக எந்த அசம்பாவிதமும் நடைபெறாவண்ணம் தொடக்கத்திலேயே அதனை சரிசெய்ய வேண்டும் என்பதே அமைதியை விரும்புபவர்களின் விருப்பம் ஆகும்.