மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய ரோட்டரி கிளப்

கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் இருந்து மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயின்று கல்லூரிகளில் பயிலும் 14 மாணவ, மாணவிகளுக்கு கோவை ரோட்டரி கிளப் டீ எலைட் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ் உற்பத்தி திறன் குழுக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கோவை ரோட்டரி கிளப் டீ எலைட் தலைவர் அருள் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க மாவட்ட உதவி ஆளுநர் ரோட்டரியன் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி பேசும் போது, குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து தற்போது தடைகளை தாண்டி கல்லூரி படிப்பு வரை வந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு தடைகற்கள் நிறைய இருக்கும். அவற்றை எதிர்கொண்டு தொடர்ந்து பயணித்தால்தான் வெற்றி பெற முடியும். தற்போது வழங்கப்படும் படிப்புக்கான உதவியை பயன்படுத்திக் கொண்டு நன்கு படித்து சமூகத்தில் உயர்ந்த பதவிகளுக்கு வர முயற்சிக்க வேண்டும். அவ்வாறு நல்ல நிலைக்கு உயரும் போது நீங்கள் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு கருணை உள்ளத்தோடு உதவி செய்ய முன் வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ரோட்டரி ஆளுநர் குழுப் பிரதிநிதியாக கலந்து கொண்ட ரோட்டரியன் செந்தில்குமார் பேசும் போது, சிறப்பு பள்ளிகளில் படிக்க வாய்ப்பு பெற்று தற்போது கல்லூரி படிப்பு வரை வந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு ரோட்டரி கிளப் சார்பில் செய்துள்ள உதவி சரியான தேர்வாக கருதுகிறேன். இதுபோன்ற தேவை உள்ளவர்களுக்கு ரோட்டரி சங்கங்கள் எந்த நேரத்திலும் உதவிகள் புரிய தயாராக இருப்பதாகவும் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு சாதனையாளர்களாக வளர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.