சுதந்திர தின விழா: இந்துஸ்தான் கல்லூரியில் 75 அடி உயர தேசிய கொடி கம்பம்

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 75வது சுதந்திர தின விழாவை போற்றும் வகையில் கல்லூரி வளாகத்தில் 75 அடி உயர தேசிய கொடி கம்பம் நிறுவப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் என்.சி.சி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் உடற்கல்வி துறை சார்பாக 75வது சுதந்திர தின விழா தனிமனித இடைவெளியோடு ஞாயிற்றுக்கிழமை அன்று கல்லூரியில் கொண்டாடப்பட்டது.

தேசியக்கொடியினை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், 75வது சுதந்திர தின விழாவினை போற்றும் வகையில் கல்லூரியின் வளாகத்தில் 75 அடி உயர தேசிய கொடி கம்பத்தினை நிறுவி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், “இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் 75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் 75 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவி மாணவர்களிடையே தேசப்பற்றை வளர்க்கும் வகையில் இக்கொடிக் கம்பம் நிறுவப்பட்டது.

நமது இந்திய தேசம் விடுதலை பெறுவதற்கு எண்ணற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் அவர்களையே தியாகம் செய்ததால் நாம் இப்பொழுது சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

மாணவர்களாகிய நீங்கள் வாழ்வில் எத்தனை உயரங்கள் உயர்ந்தாலும் உங்களுடைய உணர்வில் நாட்டுப்பற்றும் தேசப்பற்றும் வரும்பொழுது மேலும் இமாலய உயரத்தை உங்களால் அடைய முடியும்” என்று சிறப்புரையாற்றினார்.

கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி கலந்துகொண்டு பேசுகையில், கொரோனாவின் தாக்கத்தால் மாணவர்களுடைய நலன்கருதி 75வது சுதந்திர தினத்தை மிகப் பாதுகாப்பாக தனிமனித இடைவெளியுடன் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

நாம் சுதந்திரம் அடைந்து நம்முடைய வாழ்க்கை சுதந்திரமாக எப்படி வாழ்ந்து கொண்டு இருந்தோமோ அதே போல் இந்த கொரோனா எனும் அரக்கனிடமிருந்து மிகக் கூடிய விரைவில் விடுபட்டு சுதந்திர காற்றினை அனைவரும் சுவாசிப்போம். மேலும் மாணவர்களாகிய நீங்கள் அனைத்து துறைகளிலும் முழு விருப்பத்துடன் உற்றுநோக்கி அதனை கடைப்பிடித்து இறுதிவரை பயணித்தால் வெற்றி நிச்சயம் என்றார்.

என்சிசி மாணவர்களின் அணிவகுப்புடன் விழா நடைபெற்றது. மேலும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக மாணவர்களுக்கு ஆன்லைனில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் உடற்கல்வி துறை சார்பாக ஆன்லைனில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் இவ்விழாவில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் பிரியா சதீஷ்பிரபு, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், மொழித்துறை தலைவர் ரமேஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.