கோவையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 1500 போலீசார் பாதுகாப்பு

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் சுதந்திர தின விழா வ.உ.சி. மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் சுதந்திர தின விழாவின்போது கலெக்டர் கொடியேற்றி நலத் திட்ட உதவிகளை வழங்குவார்கள்.

மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் இந்த ஆண்டு தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறைந்த அளவில் அரசு அதிகாரிகள் சமூக இடைவெளி விட்டு முக கவசம் அணிந்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவையில் பொது இடங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொண்டு விதிமுறைகளை பின்பற்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவையொட்டி கோவை மாநகரில் 1,500 போலீசாரும் புறநகர் பகுதிகள் 900 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை நடத்திய பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

இதேபோல் கோவை ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் நடைமேடை மட்டும் தண்டவாள பகுதியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

தவிர கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்பு உட்படுத்தப்பட்டு வருகின்றன.