கோவையில் கொரோனா விழிப்புணர்வு கேக் கண்காட்சி

கோவையில் நடைபெற்று வரும் கொரோனா விழிப்புணர்வு கேக் கண்காட்சி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் மூன்றாம் அலைக்கான வாய்ப்புகளும் இருப்பதால் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ‘யம்மி கேக்ஸ்’ என்ற விற்பனையகத்தில் கொரோனா விழிப்புணர்வுக்காக கேக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது

தடுப்புசி செலுத்திக்கொள்ளுதல், முக கவசம் அணிதல், சமுக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட காரணிகளுடன் 40க்கும் மேற்பட்ட கேக்குகள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்ட்ராபெர்ரி, பிளாக் பாரஸ்ட், வெணிலா, ப்ளுபெர்ரி மற்றும் பழக் கலவைகளின் சுவையுடன் இந்த கேக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், இங்குள்ள 8 அடி உயரத்திலான மயில் வடிவ கேக் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து யம்மி கேக்ஸ் நிறுவனர் விஜயக்குமார் கூறுகையில், ” முதல்முறையாக சமுதாய விழிப்புணர்வு தரும் கேக்குகளை உருவாக்கியுள்ளோம். அனைத்து வகையான மாடல் கேக்குகளும், சமுதாய கருத்துக்களை உள்ளடக்கியவை. அனைத்தும் கவனமுடன் மேற்கொள்ளப்படுகிறது.” என்றார்.