ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள்: விரட்டும் பணியில் வனத்துறையினர்

கோவை நரசிபுரம் பகுதியில் ஊருக்குள் புகுந்த இரண்டு யானைகளை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (28.07.2021) இரவு முள்ளங்காடு ஆல்பா டீம் குழுவினருக்கு நரசிபுரம் பிரிவு, நரசிபுரம் பீட், வேட்டைக்காரன் கோயில் பகுதியில் இருந்து இரண்டு ஆண் யானைகள் காட்டை விட்டு வெளியே வந்து இருப்பதாக இரவு சுமார் 10 மணியளவில் தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் இரண்டு யானைகளையும் குழுவினர் பின்தொடர்ந்து சென்றதில் அவை நரசிபுரம், சிறுவாணி பைப்லைன், கருப்பராயன் கோவில் வழியாக நெருஞ்சி காடு கல்ககுழி பகுதிக்கு காலை சுமார் ஆறு முப்பது மணி அளவில் வந்தது. பின்னர் அவற்றை போலுவம்பட்டி வனச்சரக அலுவலர் முள்ளங்காடு, நரசிபுரம் மற்றும் தும்பிலி பாளையம் குழுவினருடன் இணைந்து யானையை வனத்திற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டார்.

அதில் யானைகள் இரண்டும் கள்குழியை விட்டு வெளியே வராமல் அங்கேயே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. வெயில் அதிகமாக இருப்பதால் மாலை நேரத்தில் மீண்டும் காட்டுக்கு திருப்பி அனுப்பும் பணி மேற்கொள்ளப்படும். தற்போது அங்கேயே யானைகளை கண்காணித்து வரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு இருக்கின்றனர்.