சமூக நீதி கட்சி சார்பில் வெற்றிலை வைத்து அழைப்பு விடுத்து நூதன போராட்டம்

கோவை மாநகராட்சியில் பட்டதாரிகள் தூய்மைப் பணியாளர்களாக சேர்ந்த பின்னர் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதில்லை என்று கூறி சமூக நீதி கட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் சார்பில் வெற்றிலை வைத்து அழைப்பு விடுக்கும் நூதன போராட்டம் இன்று நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு 2,520 நிரந்தர துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளனர். கடந்தாண்டு இதில் காலியாக இருந்த 325 பணியிடங்கள் நிரப்பட்டன.

இந்த பணியில் பட்டாதாரிகள், மென்பொருள் கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் போட்டிபோட்டுக்கொண்டு இணைந்தனர். இந்திய அளவில் இது பெருமையாக பேசப்பட்டது. ஆனால், அவ்வாறு பணிக்கு சேர்ந்த பட்டதாரிகள் சாதி ஆதிக்கம் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி தூய்மைப் பணியே செய்வதில்லை என்று சக தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சமூக நீதிக்கட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் ஒன்றாக இணைந்து பட்டதாரிகளாக சேர்ந்து பணியே செய்யாமல் இருப்பவர்களுக்கு நூதனமாக அழைப்பு விடுத்தனர். அதன்படி, வெற்றிலை பாக்கு தாம்பூல தட்டுடன் மத்திய மண்டல உதவி ஆணையரை சந்தித்த அவர்கள், தூய்மைப் பணியாளர்களை பணிக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்தனர்.