பல் ஆரோக்கியத்தை காக்க சில டிப்ஸ்

பற்களின் ஆரோக்கியத்தை காக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது, சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறை வாய் கொப்பளிப்பது, பல் மருத்துவரை சந்திப்பது, போன்றவற்றை செய்வது பல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மேலும், பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

காலம்காலமாக இனிப்பு சாப்பிட்டால் சொத்தை பல்  வரும், குழந்தைகள் சாக்லேட் சாப்பிட்டால் சொத்தை பல் வரும் என்று சொல்லப்படுகிறது. இது உண்மை தான். அதாவது கார்போஹைட்ரெட் உணவுகளை எடுத்து கொண்டு, சரியாக பற்களை பராமரிக்காவிட்டால் பல் சொத்தை வருகிறது. கார்போஹைட்ரேட் உணவுகளான பிரக்டோஸ், லாக்டோஸ், கேலக்டோஸ் இதனுடன்  சேர்த்து எடுத்துக்கொள்ளும் சர்க்கரையினால் பல் சொத்தை வருகிறது. அதாவது, சர்க்கரைகளை எடுத்து கொள்ளும் போது பாக்டீரியாவானது, நொதித்தல் வேலையை செய்யும். இந்த நொதித்தல் நிகழ்வின்போது, அமிலங்கள் வெளியேறும். இந்த அமிலமானது பல் சொத்தை ஆவதற்கு உதவுகிறது. பல் திசுக்களில் கால்சியம் ஹைட்ராக்ஸிபடைட் எனும் அமிலம் சேர்ந்து பல் சிதைவுக்கு வழி வகுக்கிறது. இந்த அமிலம்  மட்டுமில்லாமல், அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதும் பல் சிதைவுக்கு காரணமாகிறது.

இந்த பல் சிதைவை தடுக்க ஒவ்வொரு முறையும் ஏதேனும் சாப்பிட்டால் உடனே அல்லது ஜூஸ் போன்றவை குடித்தவுடன், வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளித்து துப்ப முடியாத இடங்களில் ஏதேனும் சாப்பிட்டால் கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம்.  உணவில்  அதிக அளவில், காய்கள் மற்றும் பழங்கள் எடுத்து கொள்ளலாம். இது பல் சிதைவை  தடுக்கும்.

GERD எனும் (Gastroesophageal reflux disease)- இந்த  பிரச்னை இருப்பவர்களுக்கு வயிற்றில் சுரக்கும் அமிலமானது,  மேல் நோக்கி வர தொடங்கும். இது வாயில் இருக்கும் பல், ஈறு போன்றவற்றை பாதிக்கும். பாக்டீரியா ஆனது அமிலத்துடன் சேர்ந்து, வாய் துர்நாற்றத்தை  ஏற்படுத்தும். இது பல் சிதைவுக்கு வழி வகுக்கும். இந்த GERD பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது அமிலம் சுரப்பதை குறைத்து பற்களை பாதுகாக்கும். வயிற்றில் அமில சுரப்பை குறைக்க உணவு முறையை மாற்ற வேண்டும். பழங்கள், காய்கள்,  சூப், சாலட் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர்  குடிக்க வேண்டும். நன்றாக தூங்க வேண்டும்.