ஒளிப்பதிவு திருத்த சட்டம்: வாழ்வாதாரத்தை பாதிக்கிறது

ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என சினிமா துறையை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக நடிகர் கார்த்தி, நடிகை ரோஹினி உள்ளிட்ட திரைத் துறையினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி கூறுகையில்: ஒளிப்பதிவு சட்டம் 2021-ல் சினிமா தொழிலாளர்களையும், சினிமா எடுப்பவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிற வகையில் சட்டத் திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. படத் திருட்டைத் தடுப்பதற்கான வலுவான சட்டங்களும் இதில் கொண்டுவந்துள்ளனர். ஆனால், அதைவிட முக்கியமானது சென்சார் சான்றிதழ் விவகாரம்.

இது கருத்து சுதந்திரம் மட்டுமில்லாமல் வாழ்வாதாரத்தையே பாதிக்கிறது. எனவே, தமிழக அரசின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்பதால் முதலமைச்சரை சந்தித்து திரைத் துறையினர் பிரதிநிதிகளாக எங்களது கோரிக்கைகளை வைத்துள்ளோம். முதலமைச்சரும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றார்.

அனைத்து துறையும் சேர்ந்து எங்கள் உரிமைக்காக உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வாழ்வாதாரத்தையே பாதிக்கிறது என்பதால் அரசுகள் ஒத்துழைக்கும. என்று அவர் கூறினார்.