கோவில்களை சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கியது

தமிழகம் முழுவதும் கோவில்கள் வரும் 5 ம் தேதி முதல் திறக்கப்படலாம் என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து கோவையில் உள்ள கோவில்களை சுத்தப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கொரோனா தொற்றின் கோரப்பிடியால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் மக்களின் வாழ்கை முறையே மாறிவிட்டது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன், வீட்டிலேயே முடங்கும் நிலையும் ஏற்பட்டது.

வழிபாட்டு தலங்கள் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு தொற்றின் தாக்கம் குறைந்த பின்னர் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்த சூழலில், கொரோனா இரண்டாம் அலையால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மீண்டும் கோவில்களை அடைக்க உத்தரவிடப்பட்டது. அப்போது முதல் நீண்ட நாட்களாக கோவில்கள் அடைத்தபடியே உள்ளன.

தினமும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இந்த வரும் 5 ம் தேதி முதல் கோவில்களும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றின் தாக்கம் குறைந்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கோவில்கள் கடந்த வாரமே திறக்கப்பட்டன.

இந்த சூழலில், அனைத்து மாவட்டங்களிலும் கோவில்கள் திறக்கப்படலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால், கோவையில் உள்ள கோவில்களை சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவையில் பிரசித்திப்பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் கோபுரங்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. இதே போல் அனைத்து கோவில்களிலும் தூய்மை பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.