கோவையில் எய்ம்ஸ் : முதலமைச்சர் கோரிக்கைக்கு எம்.பி வரவேற்பு

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு மண்டலத்தின் மையமாக கோவை மாவட்டம் உள்ளது. இங்கு கோவை மட்டுமல்லாது திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்திய ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் மோடியை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தேவையான முக்கியமான கோரிக்கைகள் குறித்த பட்டியலை அளித்து வலியுறுத்தியுள்ளார். இதில் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்கிற வலியுறுத்தலும் முக்கியமானது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் தற்போது இத்தொற்று மிக கனிசமாக குறைந்துள்ளது. இதனிடையே மூன்றாவது அலை வரும் அது குழந்தைகளை பாதிக்கும் என்கிற மருத்துவத்துறையினரின் எச்சரிக்கையை உள்வாங்கிக்கொண்டு தற்போது இருந்தே இதற்கான மருத்துவ கட்டமைப்பை உருவாக்கும் முனைப்பில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என இந்திய ஒன்றியத்தின் பிரதம அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதனை கோவை மாவட்ட மக்களின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்கிற தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையின் நியாயத்தை ஒன்றிய அரசு உணர்ந்து உடனடியாக அதற்கான ஒப்புதலை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.