தமிழ் மொழிக்கு நிகர் எந்த மொழியும் இல்லை

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்

தமிழ் மொழி இருக்கை அமைக்க ரூ.65 லட்சம் நிதி

கொங்கு விளையாட்டு குழு திருப்பூர் மற்றும் கொங்கு மண்டல ஆர்வலர்கள் சார்பில் வழங்கப்பட்டது

 

உலக அளவில் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ்மொழி இருக்கை அமைக்க நன்கொடை வழங்கும் விழா திருப்பூர் கொங்கு விளையாட்டுக்குழு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக, கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் சிந்தனை கவிஞர் கவிதாசன், நன்னெறிக்கழக தலைவர் இயகோகா சுப்பிரமணியம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ்நாட்டின் பிரதிநிதி பேராசிரியர் பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ் ஆர்வலர்கள், கலைஞர்கள் என பெருந்திரளானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

தமிழை குறைக் கூறுபவர்கள், தமிழை சரியாக படிக்கவில்லை என்றுதான் அர்த்தம்

இயகோகா சுப்ரமணியம் பேசுகையில்:

உலகிலேயே கடவுள் படைத்த மொழி என்றால் அது தமிழ்மொழி தான். தமிழ் மொழிக்கான கடவுள் என்றால் அது முருக பெருமான். உலகத்தில் இந்த அளவுக்கு தமிழ் மொழியை யாரும் உயரத்தில் வைத்ததில்லை. ஆனால், தற்பொழுது உலகில் வாழ பணம் ஒன்று தான் முக்கியமான மொழி என்பதை இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஆழப் பதித்துவிட்டதால், எங்கே நம் தமிழ்மொழி அழிந்து விடுமோ என்ற பயம் என்னை போன்றத் தலைமுறையினருக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

ஒரு இனம் அழிவதற்கு காரணம், அதன் மொழி அழிவது தான். ஒரு மொழி அழியாமல் இருக்க வேண்டுமானால் அதை, பேசுவது, எழுதுவது, கேட்பது, வாசிப்பது மட்டும் அல்ல, அம்மொழியை ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகளிடம் உரையாடுவதில்தான் ஒரு மொழி கால காலத்திற்கும் அப்படியே இருந்து கொண்டிருக்கும்.

தமிழகத்தில், வேற்று மொழி பேசக் கூடியவர்கள் ஒரு கணிசமான அளவில் இருக்கிறார்கள். தெலுங்கு மொழி பேசுபவர்களும், தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் தங்களில் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசும் பொழுது, ’பாகுன்னாரா’ என்று அவர்கள் தாய் மொழியில்தான் பேச ஆரம்பிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வசிக்கும் மற்ற மொழி பேசுபவர்கள், அதே இனத்தவரை பார்க்கும் பொழுது தன் தாய்மொழியில் தான் பேசுகிறார்கள். அதை பெருமையாக நினைக்கிறார்கள். ஆம், அது பெருமையும் கூட. ஆனால், இரண்டு தமிழர்கள் மட்டும் தாங்கள் சந்திக்கும்போது அது எந்த மண்ணாக இருந்தாலும், முதலில் ஆங்கிலத்தில்தான் நலம் விசாரித்து பேசுகிறார்கள்.

ஏன் இந்த வியாதி தமிழனைப் பிடித்திருக்கிறது என்றால், ’தமிழ் தமிழ்’ என்று தமிழை நாங்கள் வளர்க்க வந்திருக்கிறோம், வாழ்விக்க வந்திருக்கிறோம் என்று கூறியவர்கள் எல்லாம் தங்களை வளர்த்துக் கொண்டதன் காரணமாக, இவர்களால் மட்டும் தான் தமிழ் மொழி கெட்டு விட்டதோ என்று எண்ணி நாமும், இதைப் பேசாமல் இருப்பதே நல்லது என்று எண்ணும் அளவிற்கு வந்துவிட்டது.

இன்று, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக தேவைப்படும் தொகை ரூ.10 கோடி. இது ஒன்றும் அவ்வளவு பெரிய தொகை அல்ல. தமிழக அரசாங்கமே கொடுத்திருக்கலாம். ஆனால், இன்றைய அரசியல் நிலை அப்படியா உள்ளது? ஆனாலும், நம் தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள், இளைஞர்கள் என அனைவரும் தமிழ்ப் பற்றோடு இந்த நிதியினை திரட்ட முயற்சித்து வருகிறார்கள்.

தமிழை குறைக் கூறுபவர்கள், தமிழை சரியாக படிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

எனவே, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் வருகை என்பது, தமிழ் ஆளுமையை, நாம் வாழ்ந்த வாழ்க்கையை உலகளாவிய அளவிற்கு எடுத்துச் செல்வதற்கான ஓர் அற்புத வழியாகும். இதன் மூலம் தமிழ் மொழியும் வளர்ச்சி அடையும் என்றார்.

 

 

தமிழ்மொழிக்கு இருக்கை கிடைத்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அரியணை கிடைத்தது போல

பேராசிரியர் பேச்சிமுத்து பேசுகையில்:

நதிக்கரை எல்லாம் நகரங்களுடைய நாகரிகத்தை வளர்த்தெடுத்த பூமி என்று சொல்லுவார்கள். இந்த கொங்கு மண்டலம், குறிஞ்சியும், மருதமும் கலந்து வளர்ந்த அழகான ஒரு பூமி. எந்த பூமி வளமாக இருக்கிறதோ, அந்த பூமியில் வாழும் மனிதர்கள் தான் வளமான மனிதர்கள் என்பது மானுடவியல் தத்துவம். அப்படிப்பட்ட இந்த வளமான பூமியில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்ட நாமெல்லாம் இங்கே திரண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மற்ற மொழியாளர்கள் கூட தங்களது தாய்மொழியில் பேசுகிறார்கள். ஆனால், நம் தமிழர்கள் மட்டும் இன்று தோன்றிய ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள். சமஸ்கிருதமும், தமிழும் தான் இன்று செம்மொழிகளிலே உயிரோடு வாழ்கின்ற மொழிகள்.

இதில், சமஸ்கிருத மொழியானது ஒரு சிலரால் மட்டுமே எழுதுவதற்கும், படிப்பதற்கும், கோவில்களில் மந்திரங்கள் கூறுவதற்கும்தான் பயன்பட்டு வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், நம் தமிழ்மொழி மட்டும்தான் இன்றளவும் பெருவாரியான மக்களிடையே பேச்சு வழக்கில் இருந்து வருகிறது. இதைக் கண்டு நாம் பெருமை கொள்ள வேண்டும்.

ஆகவே, உலகத் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் என்பதற்காக ஏறத்தாழ 6300 நபர்கள் நன்கொடை அளித்திருக்கிறார்கள். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கு இருக்கை கிடைத்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அரியணை கிடைத்தது போல என்றார்.

 

தமிழ் மொழிக்கு நிகர் எந்த மொழியும் இல்லை

கவிஞர் கவிதாசன் பேசுகையில்:

கவிஞர் கவிதாசன் பேசுகையில்: ஒரு மொழி எப்படி செம்மொழியானது என்பதை பத்திரிகைகளில் படித்து தெரிந்திருப்பீர்கள். ஒரு மொழி செம்மொழியாக வேண்டும் என்றால் 11 தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். நம்முடைய தமிழ் மொழி 4000 ஆண்டுகளுக்கு முன்னாள் பேசப்பட்டது. எம்மொழிக்கு நிகர் எந்த மொழியும் இல்லை.  கொங்கு மண்டலத்தில், கொங்கு விளையாட்டுக் குழு திருப்பூர் மற்றும் கொங்கு மண்டல தமிழ் ஆர்வலர்கள் சார்பில், தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு ரூ.65 லட்சம் கொடுத்ததில் பெரும் மகிழ்ச்சி.

நிதி திரட்டுவதற்கான அறிவிப்பு வந்தவுடன் தமிழக அரசிடம் சென்று, இந்த நிதியை நமது அரசாங்கமே வழங்கலாமே என்று கேட்டபொழுது, தமிழ் இருக்கைக்கான ரூ.10 கோடி நிதியை தமிழக அரசு கொடுப்பதில் எந்த ஒரு தயக்கமும் இல்லை. ஆனால், தமிழர்களாகிய நம் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கொடுத்தால் பெருமையாகவும், அதே சமயம் தமிழ் உணர்வும் மக்களிடையே அதிகமாகும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஆகவே, வளர்ந்து வரும் இளம் சமுதாயத்திற்கு, நாம் தமிழ் மொழியைக் கொண்டு சேர்ப்பதோடு, தமிழ் மொழியின் பெருமைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து தமிழ் மொழியை வளர்க்க வேண்டும். இதற்கு இன்றைய இளம் தலைமுறையினர் உறுதுணையாக இருக்க வேண்டும். கொங்கு மண்டலமாம், திருப்பூரில் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வந்தவர்கள், தங்கள் தொழில் மட்டுமல்லாது தமிழ் மண்ணின் தாய்மொழியாம் தமிழையும் நன்றாகக் கற்றுக் கொண்டுள்ளனர். இதைக் கண்டு நாம் அனைவரும் தமிழன் என்ற முறையில் பெருமைகொள்ள வேண்டும். மேலும், கவிஞர் பாரதியாருக்குப் ஆங்கிலம், சமஸ்கிருதம், வங்காளம், இந்தி போன்ற ஏழு மொழிகள் தெரிந்திருந்தாலும்,

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவ தெங்குங் காணோம்

என்ற அவரது கூற்றில், தமிழ்மொழியின் பெருமையை நாம் அறியலாம். ஆகவே, இன்று நாம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெரும் என்றார்.