நமது அடையாளத்தை எரியவிடுவதா?

நமது அற்புதமான கலைச்செல்வங்களை அற்ப காசுக்காக நாம் அழித்துக்கொண்டு வருகிறோமோ என்று தோன்றுகிறது

தமிழகம் என்றாலே கோயில்கள்தான் என்றால் அது மிகையே அல்ல. இந்தியாவில், ஏன் உலக அளவில்கூட பெருமை கொள்ளத்தக்க கலைப் படைப்புகளாக தமிழகத்தின் கோயில்கள் காலத்தைத் தாண்டி நின்று கண் முன்னே காட்சி தருகின்றன. நமது தமிழக அரசின் சின்னமும் கோயில் கோபுரம்தான். இந்த பழங்கால கோயில்கள் எல்லாம் பல நூற்றாண்டுகள் பழைமையும், பெருமையும் வாய்ந்தவை. பழங்காலம் தொட்டு நமது கலை, மருத்துவம், கல்வி, ஆன்மிகம், அரசியல், பண்பாட்டு மையமாக கோயில்கள் இருந்துள்ளன. இன்றும் கோயில் கல்வெட்டுகள் அந்த வரலாற்றுக்கு ஆதாரமாக இருக்கின்றன. மேலும், இங்குள்ள சிற்பங்களும், ஓவியங்களும் நமது மதிப்பில்லாத வரலாற்று கலைச்சொத்தாகத் திகழ்கின்றன. இதனால்தான் இதனைத் திருடும் கும்பலும் பெருகியுள்ளன.

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் என ஏராளமான கோயில்கள் கலையின் வடிவமாக நாடெங்கும் இருக்கின்றன. தமிழகக் கோயில்கள் தமிழக அரசின் அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில கோயில்கள் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன. மேலும் சில கோயில்கள் சர்வதேச அமைப்பான யுனெஸ்கோவால் நிதியுதவி பெறப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

இந்நிலையில், நமது பெரும்பாலான கோயில்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தாலும், பரவிவரும் வணிக ரீதியான நடவடிக்கைகளால் இவற்றின் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு

ஒரு உதாரணம்தான், மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து. அண்மையில் இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த வசந்தராயர் மண்டபப் பகுதி முற்றிலுமாக தீ விபத்தால் பாதிக்கப்பட்டது. பசுபதீசுவரர் சன்னிதியின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இருப்பினும், தொழில்முறை வல்லுநர் குழுவானது, சேத மதிப்பு என்ன என்பதைக் குறித்து அறிக்கை வெளியிடவில்லை. கோயில்கள் என்பவை கடவுள் அருள்பாலிக்கும் தலமாகவும், கலை, பண்பாட்டு, அறிவியல் உறைவிடமாகவும் உள்ளன. ஆனால், அவற்றை நாம் எவ்வளவு கேவலமாக பராமரித்து வருகிறோம் என்பதற்கு இந்த தீ விபத்து ஒரு சாட்சி.

பொதுவாகவே அந்த காலத்தில் கட்டப்பட்ட பெரிய, பெரிய அரிய கோயில்களைத் தகுந்த முறையில் பராமரிக்கத் தேவையான நிதி ஆதாரமும் இல்லை, தகுந்த தொழில்நுட்பங்களும் இல்லை என்பது பலரது குற்றச்சாட்டு. இந்நிலையில் இதுபோன்ற தீ விபத்துகள் பல ஐயங்களை எழுப்புகின்றன. குறிப்பாக, இந்த கோயில் வளாகத்துக்குள் இயங்கி வரும் கடைகள் குறித்து பல கருத்துகள் சொல்லப்படுகின்றன.

மிகப்பெரிய இடவசதி கொண்ட வளாகங்களைப் போன்ற கோயில்களில் தீ விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படி ஏற்பட்டாலும் பெரிய நெருக்கடி இல்லாமல் தீயை அணைத்துவிடலாம். பெரிய இடவசதி கொண்ட மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்து அப்படி அல்ல. இங்கே கோயிலுக்குள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த கடைகளில் தீப்பிடிக்கத் தொடங்கியவுடன், அடுத்தடுத்து இருந்த அனைத்துக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவியதாகக் கூறுகிறார்கள்.

இதனால் அங்கிருந்த கலைக் கட்டடங்கள், காற்றுகூட வெளியேற முடியாத அளவுக்கு சூடேறி பாதிக்கப்பட்டு இருக்கின்றன. பழைய நிலைக்கு இந்த மண்டபமும் சிற்பங்களும் திரும்ப வாய்ப்பில்லை என்ற தகவலையும் சிலர் கூறுகிறார்கள். மேலும், தினசரியில் வெளியிடப்பட்ட ‘பழைய படம், புதிய படம்’ என்ற ஒப்பீட்டில், மண்டபத்தின் மேற்கூரையில் படிந்திருந்த கரும்புகை, அங்கிருந்த கலைப்பொக்கிஷமான ஓவியங்களைக் காணாமல் போகச்செய்துவிட்டது என்பது வருத்தத்துக்குரிய செய்தி.

கோயில்கள் என்ற நமது அற்புதமான கலைச்செல்வங்களை அற்ப காசுக்காக நாம் அழித்துக்கொண்டு வருகிறோமோ என்று தோன்றுகிறது. கோயில்களைச் சுற்றி பக்தர்களின் வசதிக்காக வணிக நிறுவனங்கள், கடைகள் அமைவதில் யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புனிதமும், பெருமையும், சிற்பக் கலையழகும் வாய்ந்த கோயில்களுக்கு உள்ளேயே தகரம், பிளாஸ்டிக் மற்றும் தட்டிகளால் அமைக்கப்படும் கடைகளால் எவ்வித அழகும் பெருமையும் கோயிலுக்கு சேராது.

பதிலாக, இதுபோன்ற சமயங்களில் விபத்தை ஏற்படுத்தி பழைமையான கோயிலை நாசப்படுத்தத்தான் உதவும். சில பேருக்கு இந்த கடைகளின் மூலம் வருமானம் கிடைக்கிறது என்றால் கோயில் நிர்வாகமோ, சமூக சேவை அமைப்புகளோ, அரசாங்கமோ மாற்று இடங்களில் அவர்களுக்கு கடை கட்டித்தரலாம் அல்லது அவர்களது வருமானத்துக்கு வேறு வழி செய்துதரலாம்.

அதை விடுத்து இவர்களை ஊக்குவிப்பது இன்னும் பல இடங்களில் இதுபோன்ற ‘தீ’ பரவ வழிகோலும். ஏராளமான வருமானமும், உலகப்புகழும் பெற்ற கோயில்களை இதுபோன்ற தீ விபத்து உள்ளிட்ட அபாயங்களில் இருந்து காப்பாற்ற நிர்வாகம் செய்திருந்த ஏற்பாடுகள் என்ன என்பது இங்கே கேள்விக்குறி.

எப்போது பார்த்தாலும் குதிரை வெளியே ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதுபோல, விபத்து நடந்த பிறகு அரசு அதிகாரிகள், மற்ற பெரியவர்கள் பார்வையிடுவதும், நிவார ணப்பணிகள் மேற்கொள்வதும் இன்னும் எத்தனை காலத்துக்கு தொடரப்போகிறது? இதே ஆசாமிகள், கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்தால் அவர்களுக்கு தனி மரியாதை வேறு! எதற்கு? இவ்வாறு கேட்பாரற்று கோயில்களை விட்டுச்செல்லவா? இல்லை, வெறும் வருமானத்தை அள்ளிக்கொண்டு போகவா?!

நாம் தற்போது கட்டும் பல அரசுக் கட்டடங்கள், மேம்பாலங்களின் இலட்சணம் என்னவென்று நமக்கே நன்றாகத் தெரியும். மவுலிவாக்கம் கட்டடம் தொடங்கி கோவை சோமனூர் பேருந்து நிலையக்கூரை, நாகப்பட்டினம் பேருந்த பணிமனைக் கட்டடம், திருச்செந்தூர் கோயில் பிரகாரம் உள்ளிட்ட பல விபத்துகள் நமது நிர்வாகத்தின்  பொறுப்பற்றத் தன்மையையும், அலட்சியத்தையும் காட்டுகின்றன. ஒரு கும்பகோணம் பள்ளி தீ விபத்து நமது கண்களைத் திறந்ததுபோல, மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தும் நமது அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கண்களைத் திறக்க வேண்டும்.

தமிழகமெங்கும் உள்ள அரிய கலைச்செல்வம், ஆன்மிக மையங்களாக உள்ள கோயில்களை நன்கு பாதுகாத்து பராமரிக்க இந்த விழிப்புணர்வு உடனடியாக வேண்டும். மற்ற நாடுகளில் இதுபோன்ற கலைச்செல்வங்களை எப்படி பாதுகாக்கிறார்கள் என்பதைப் பார்த்தாவது, இல்லை கேட்டாவது புரிந்து கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும். வருமானத்திற்காக, நமது நூற்றாண்டுகால பாரம்பரியத்தைக் கூறு போட்டு விற்கக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கோயில்கள் நமது தலைமுறை கட்டியதல்ல. நம்மாலும் இதுபோன்ற கலைச்செல்வங்களை உருவாக்கவும் முடியாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கலை, அறிவியல் அறிவோடு கட்டப்பட்டு, பின்னர் ஆண்டாண்டு காலமாக அறிவுடைய நமது முன்னோர்களால் பராமரிக்கப்பட்டு வந்தவைதான் இந்த கோயில்கள். அவற்றை நல்ல முறையில் பராமரிக்கத்தான் நமக்கு உரிமை உண்டே தவிர, இதனை போண்டா விற்பதற்கும், பரோட்டா விற்பதற்கும் பயன்படுத்த அல்ல. மேலும், இறுதியாக ஒன்று, இந்த கோயில்களின் உரிமையாளர்கள் நாம் அல்ல. ஆம். இந்த கோயில்களை அடுத்துவரும் தலைமுறைக்குக் கொடுத்துச் செல்ல பாதுகாக்கும் பாதுகாவலர்கள்தான் நாம். இந்த உணர்வு, அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் மற்ற எல்லோருக்கும் வர வேண்டும். அதைத்தான் இந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து நமக்குப் பாடமாக இடித்துரைக்கிறது.