இளைஞர்கள் மனதில் துளிர்விடும் மனித நேயம்

பல உயிர்களை கொரோனா தின்று கொண்டிருந்தாலும், நம் பலர் மனதில் மனிதநேயம் துளிர்விட்டிருக்கிறது. ஊரடங்கு பலரையும் தொற்றிலிருந்து பாதுகாப்பதாக இருந்தாலும் சிலருக்கு வாழ்வதற்கும் பசி போக்கவும் போராட வேண்டியதாக உள்ளது.

இருப்பவர்கள் இருப்பதை மட்டுமே தானமாகவும் தர்மமாகவும் கொடுத்து வந்த நிலை கொரோனவால் கொடுக்க மனமிருந்தால் போதும் பலரது பசியை போக்கலாம் என்று பலரும் பல விதமான செயல்களை செய்து வருகின்றனர்.

அரசு முதல் தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் வரை சாலை ஓரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். பசி போக்க நிறுவனங்கள் மட்டுமல்லாது பொது மக்களான எங்களாலும் முடியும் என்று தங்களிடம் உள்ள பணத்தை வைத்து முடிந்த வரை உணவு வழங்கி வருகின்றனர்.

இதனை பல இளைஞர்கள் செய்து வருகின்றனர் என்பது இன்னும் மகிழ்ச்சியை தரும் செய்தியாக உள்ளது. சமீபத்தில் கோவை நகர பகுதியில் பலரும் உணவு வழங்கி வருகின்றனர். ஆனால் கிராமப்புற பகுதிகளில் எந்த அளவிற்கு இது சாத்தியம் என்பது தெரியவில்லை. இதனை அறிந்த “வீ ஃபார் சேஞ் 2021” கோவை பிரதர்ஸ் என்ற பெயரில் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைத்து தங்களது பணத்தையும், இணைய வழியில் மற்ற வெளி நண்பர்கள் மூலமாகவும் நிதி திரட்டி ஒரு நாளைக்கு 300 முதல் 400 பேருக்கு உணவு வழங்கி வருகின்றர்.

தொடக்கத்தில் இவர்களுக்குள் சேகரித்த நிதியை வைத்து 100 பேருக்கு உணவு வழங்கினர்.  தற்பொழுது இவர்களது நண்பர்கள் பலர் இதில் பங்கேற்க முடியவில்லை என்றாலும் நிதி உதவி வழங்கி இவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இதனை செய்து வரும் இவர்கள் ஊரடங்கு முடியும் வரை இதனை செய்வோம் என்கிறார்கள்.

இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல இளைஞர்கள் வெளியில் தெரியாமல் சாலை ஓரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்குவது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தாலும் சாலை ஓரம் வசிப்பவர்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை கொடுத்து அவர்களை வாழ வைப்பது இதிலும் பெரிதாக விளங்கும்.