100 வீடுகளுக்கு ஒரு நோய்தொற்று தடுப்பு பணியாளர்

கோவையில் ஊரகப் பகுதிகளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 100 வீடுகளுக்கு ஒரு நோய்தொற்று தடுப்பு பணியாளர் வீதம் 3,414 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊரகப் பகுதிகளில் கொரோனா பரவலை விரைந்து கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்கும் விதமாக 100 வீடுகளுக்கு ஒருவர் வீதம் கொரோனா நோய்தொற்று தடுப்பு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களிலும் 3 லட்சத்து 41 ஆயிரத்து 447 வீடுகளுக்கு 3 ஆயிரத்து 414 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோர் கொரோனா நோய்தொற்று தடுப்பு பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது: கோவையில் கொரோனா 2 ஆவது அலை குறைந்து வரும் வேளையில் 3 ஆவது அலையை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலே ஊரகப் பகுதிகளில் 100 வீடுகளுக்கு ஒரு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நோய்த் தொற்று தடுப்பு பணியாளர்கள் நாள்தோறும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் ஆய்வு செய்து காய்ச்சல் உள்பட கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகளுடன் உள்ளவர்களின் விவரங்களை சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு வழங்குவர்.

வட்டார அளவிலான சுகாதார அலுவலர்கள் இந்த அறிக்கையினை தொகுத்து தினமும் மாலை எனக்கு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் நோய்த் தொற்று அறிகுறிகளுடன் உள்ளவர்களின் விவரங்கள் உடனடியாக தெரியவரும். அவர்களுக்கு கொரோனாப் பரிசோதனை மேற்கொள்ளல், சிகிச்சை அளிக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை வட்டார மருத்துவ அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படும். என்றார்.