ஊரடங்கின் முழு பயன் ஒரு சில நாட்களில் தெரியும் – கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 3 ஆயிரத்து 100 படுக்கை வசதிகளுடன் சுமார் 12 முதல் 15 வரை கொரோனா சிகிச்சை மையங்கள் அரசு மூலம் இயங்கி வருவதாகவும், கிராம ஊராட்சி அளவிலும் ஊரக பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் இன்று முதல் செயல்பட துவங்கியுள்ளதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

இந்த ஊரடங்கில் தொற்று பரவல் பெருமளவில் குறைக்கப்படும் என நம்பப்படுவதாகவும், ஊரடங்கின் முழு பயன் அடுத்த ஒரு சில நாட்களில் தெரியவரும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார்.

மாவட்டம் முழுவதும் 700 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில், ஊரடங்கு காரணமாக பொதுமக்களை பாதிக்காதவாறு அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆக்சிஜன் தேவையை பொருத்தவரை, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின்றி கிடைப்பதாகவும், சில பெரிய தனியார் மருத்துவமனைகளும் ஓரளவு எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் மருத்துவமனைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுதும் போதுமான ஆக்சிஜன் கிடைத்து வருவதாகவும் கூறினார்.