தடுப்பூசி மையங்களை தேடி அலையும் மக்கள்

கோவை மாவட்டத்தில் கொரானா தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வரும் நிலையில், தடுப்பூசி மையங்களும் மாற்றி அமைந்துள்ளதால் குழப்பத்தில் மக்கள் தடுப்பூசி மையங்களை தேடி அலையும் நிலை உருவாகியுள்ளது.

கோவையில் தடுப்பூசி செலுத்துவதில் தொடர்ந்து தட்டுப்பாடும் குழப்பமும் நிலவுவதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தற்பொழுது ஒரு தடுப்பூசி மையத்திற்கு 200 தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் 45 வயதிற்கு மேல் முதல் தவனை தடுப்பூசி செலுத்தி 84 நாட்கள் கடந்தவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படுகிறது.

மேலும் இதுவரை செலுத்தி வந்த தடுப்பூசி மையத்தில், தடுப்பூசி இல்லாததால் வந்த பலரும் சோகத்துடன் திரும்பி வருகிறார்கள்.மேலும் கோவையில் பொதுமக்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி கிடைப்பது இல்லை எனவும், ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாலை முதலே தடுப்பூசி செலுத்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மருத்துவர்கள் காலை 10 மணிக்கு மேல் வந்த பிறகுதான் வரிசையில் நிற்பவர்களில் 45 வயதிற்கு மேல் இரண்டாம் தவனையாக தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்ற செய்தி தெரிய வந்ததால் மக்கள் அதிருப்தியுடன் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது கொரானாவில் இருந்து தற்காத்து கொள்ள இருக்கும் ஒரே வழி தடுப்பூசிதான் என்ற நிலையில், அரசு விரைந்து அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். மேலும் கோவாக்சின் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு ஏன் என்பதையும் மக்களிடம் விளக்கி அச்சத்தை போக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.