தினமும் சுமார் 60 நபர்களுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர்

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில்  ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்காக 15ஆம் தேதி வரை டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தினமும் சுமார் 60 நபர்களுக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கோவையில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு கவுன்டரில் சுகாதாரத்துறை சார்பில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு சுமார் 60 நபர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, தினமும் சுமார் 550 வயால் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 15ம் தேதி வரை மருந்து வழங்குவதற்கான டோக்கன்கள் வினியோகித்து முடிந்து விட்ட நிலையில், அடுத்த வாரத்துக்கான டோக்கன்கள் 16ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் மருந்து ஒரு வயால் 1,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு அதிகபட்சமாக, 6 வயால் மருந்துகள் வழங்கப்படுகின்றன. கொரோனா பரிசோதனை சான்று, ‘சிடி’ ஸ்கேன் சான்று, டாக்டர் பரிந்துரை கடிதம், நோயாளியின் ஆதார் அட்டை நகல் மற்றும் மருந்து வாங்க வருவோரின் ஆதார் அட்டை மற்றும் நகல் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே தற்போது மருந்துகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் மருந்து வாங்க வரும் நபர்களுக்கு கல்லூரி வளாகத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டோக்கன் இல்லாமல் உரிய ஆவணங்களுடன் மருந்து வாங்க வந்த ஏராளமானோர் மரத்தடியிலும், நுழைவாயிலும் நின்று கொண்டு மருந்து வாங்க பரிதவித்து வருகின்றனர்.  அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் டோக்கன் வாங்க 16ஆம் தேதி வருமாறு கூறி கலைந்து போகுமாறு, அறிவுறுத்தி வருகின்றனர்.