சுதந்திரம் அளிப்பதும் ஒரு வித அன்பு தான்

தந்தை மகனுக்கு இடையே உள்ள உறவு என்றும் ஆழமான நம்பிக்கையுடன் கொண்ட அன்பில் நிறைந்த உறவாகும். இது மகன் குழந்தை என்ற நிலையில் இருக்கும் வரையில் தான் நிலைக்கும். அதுவே மகன் குழந்தை என்ற நிலையில் இருந்து இளைஞன் என்ற நிலை வரும் பொழுது இந்த உறவில் ஆரம்ப கட்ட நம்பிக்கையும், அன்பும் இருப்பதில்லை.

ஏன் இவ்வாறு நடக்கிறது, குழந்தை பருவத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையான உறவு வெறும் உறவாக மட்டுமல்லமால் அது நட்பாக உருவெடுத்திருக்கும். குழந்தையின் மனதில் கள்ளமும் இருக்காது, கபடமும் இருக்காதது. ஒரு சுத்தமான குளிர்ந்த நீரை அருந்துவதால் ஒருவனின் உடல் எப்படி குளிர்கிறதோ அதைபோல் இந்த கள்ளமில்லா குழந்தையுடன் இருக்கும் பொழுது தந்தையின் மனமும் இளகி குழந்தையின் குணத்தை பெறுகிறார்.

அதுவே மகன் குழந்தை என்ற ஸ்தானத்தில் இருந்து இளைஞன் என்ற ஸ்தானத்திற்கு வளர்ந்து விட்டால் இருவரின் மனமும் குணமும் ஒன்றுடன் ஒன்று மோதி கொள்ள ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்லாது மகன் இளைஞன் என்பதால் வயதிற்கேற்ப அவனது குணாதிசயங்களும் மாறுபடும். இந்த வயதினருக்கு தந்தை ஒரு பரம எதிரியாகவே தெரிவார். அதனை கொண்டு மகன் தந்தையின் வார்த்தைகளை அவ்வப்போது உதாசீனப்படுத்துவதுண்டு. இந்த நிலைக்கு ஒருவகையில் தந்தையும் காரணமாவார்.

ஒரு பார்வை தன் குஞ்சுகளுக்கு இரையை தானே கொண்டுவந்து ஊட்டி விடும். அந்த குஞ்சுகளுக்கு இறகு முளைத்தவுடன் அவைகளுக்கு பறக்க கற்றுக்கொடுக்கிறது. அவைகள் பறக்க ஆரம்பித்துவிட்டவுடன் அவைகளை சுதந்திரமாக பறக்க விடுகிறது. இதனால் பார்வைகளுக்கு தனது குஞ்சுகளின் மேல் அன்பில்லை என்று அர்த்தமில்லை. சுதந்திரம் அளிப்பதும் ஒரு வித அன்பு தான்.

அந்த வகையில் பெற்றோர் தனது மகன் குழந்தையாக இருக்கும் பொழுது அவனை அரவணைத்து பார்த்து கொள்கிறார்கள். அதுவே அவன் வளர்ந்த பிறகும் அவனை தனது பிடியில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இதனை ஒரு தாய் செய்வதை விட தந்தை செய்தால் அதன் விளைவு மகனின் குணங்களில் எதிரொலிக்கும். அளிக்கவேண்டிய சுதந்தரத்தை வழங்கி அவனிடம் கிடைக்கின்ற பொழுதுகளில் அறிவுரைகள் அல்லாது உரையாடினால், தந்தை மகன் உறவிற்கு இடையே நட்பு என்ற பாலம் உருவாகும். இது தந்தைக்கும் ஒரு நல்ல மனநிலையை ஏற்படுத்தும், மகனுக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

எந்த ஒரு குழப்பங்களுக்கும், பேசி தீர்ப்பதை விட சிறந்த தீர்வு ஏதேனும் உள்ளதா என்ன?. புரிந்து கொள்ள முடியாத தந்தை மகன் உறவைகூட இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டால் அந்த உறவை புனிதமிக்க முடியும்.