இரண்டாம் அலையை சமாளிக்க சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கூடுதல் நிதியுதவி தேவை  – கொடிசியா  

கொரோனா இரண்டாம் அலையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் உற்பத்தி, மூலப் பொருட்களின் உயர்வு,  போக்குவரவு  கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு, விற்பனையும் நேரடியாக பாதிக்கப்பட்டு நிதி பற்றாக்குறை ஏற்படுவதால்  இத்தொழில்கள்  பாதுகாக்கப்பட கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் 19 பெருந்தொற்று இரண்டாம் அலையால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்டு உள்ளதோடு, எதிர்வரும் 6 மாதங்களில் உற்பத்தி சார்ந்த செயல்பாடுகள் வெகுவாக கூறிய வாய்ப்புகள் உள்ளன.

அவர் முன் வைத்துள்ள சில கோரிக்கைகள்:

தொழிற்சாலைகள் செலுத்த வேண்டிய கடன் தொகைகள் மற்றும் அதற்கான வட்டி தொகை ஆகியவற்றுக்கு 6 மாதகால கடன் விடுப்புக் காலம் அளிக்கப்பட வேண்டும். நடப்பு மூலதன கடன் அல்லது ரொக்கக் கடன் வசதி ஆகியவற்றில் கூடுதலாக 20% கடனுதவியை எந்த நிபந்தனையும் இல்லாமல் வங்கிகளும், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் வழங்க வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடும் வகையில் இரண்டு வருட காலகடன் விடுப்பு காலத்திற்கு பிறகு கூடுதல் கடன் தொகையை திருப்பி செலுத்தும் காலத்தை 6 ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும். இயங்காச் சொத்து நடைமுறைகள் குறித்த தளர்வுகள் வரும் 31.03.2022 வரை நீட்டிக்கப்பட வேண்டும்.

நாடெங்கும் உள்ள பல மாநிலங்களில் கோவிட் 19 பெருந்தொற்று வேகமாக பரவி வரும் காரணத்தால், சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகளின் பணப் புழக்கமும், வணிகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன இந்தநிலையில் வங்கிகளிடமிருந்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் கடன் தொகையைச் செலுத்துமாறு கடுமையான அழுத்தம் தரப்படுகிறது.