பூ மார்க்கெட் தற்காலிக இடமாற்றம்

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தொடர்ந்து கோவை பூ மார்க்கெட் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய பூ மார்க்கெட் வளாகத்தில் பூ வியாபாரிகள் 50 கடைகள் வரை வியாபாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள  கடைகள்  தற்காலிகமாக ஆர்.எஸ்.புரம் பரியல் மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.புரத்தில்  செயல்பட்டு வந்த பூமார்க்கெட்டில்  140க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு சத்தியமங்கலம், சிறுமுகை,பெங்களூரு, நீலகிரி, திண்டுக்கல், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து தினமும் 20 டன்களுக்கும் அதிகமான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக  கடந்த ஆண்டு மார்ச் 25 முதல்  பூ மார்க்கெட் வளாகம் மூடப்பட்டது. இதனை அடுத்து இங்கு செயல்பட்டு வந்த  கடைகள், புரூக் பாண்ட் சாலையில் உள்ள தேவாங்க பள்ளி மைதானத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டன.

பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அன்மையில் மீண்டும் பழைய பூ மார்க்கெட் பகுதியிலேயே வியாபாரம் மேற்கொள்ள பூ வியாபாரிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே ,கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மலர் அங்காடி வளாகத்தில்  ரூ.70 லட்சம் மதிப்பில் 95 பூக்கடைகள் புதியதாக கட்டும் பணியானது, கடந்த ஆண்டு மே மாதம் துவங்கியது. இந்த பணிகள்  கடந்த 2 மாதங்களுக்கு முன் நிறைவடைந்தன. இங்கு அமைக்கப்பட்ட புதிய கடைகள் ஏலம் மூலம் மட்டுமே வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக  மாநகராட்சி அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பூ மார்க்கெட் பகுதியில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.