அரசு மருத்துவமனை  செவிலியர்கள்  போராட்டம்

கோவை அரசு மருத்துவமனையில்  செவிலியர்கள்  பற்றாக்குறை இருப்பதன்  காரணமாக  டீன் அலுவலகம் முன்பு செவிலியர்கள் திடீர் போராட்டத்தில்  இன்று (28.4.2021) ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் புற நோயாளிகள்  சிகிச்சைக்காக வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் காரணமாக தனி  வார்டு சிகிச்சை மையம்அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே இன்று காலை அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூடுதல் நர்சுகளை உடனே நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “அரசு மருத்துவமனையில் நர்சுகள் பற்றாக்குறை உள்ளது. அதன் காரணமாக நோயாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவதில்லை. எனவே கூடுதலான செவிலியர்கள் உடனே பணியில் அமர்த்த வேண்டும்” என்றனர். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் பணிக்கு திரும்பினர்.

ஏற்கனவே பயிற்சி மருத்துவர்கள் தங்கும் வசதி மற்றும் உணவு சரியில்லை என போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. பயிற்சி மருத்துவர்களை தொடர்ந்துசெவிலியர்களின்  இந்த திடீர் போராட்டத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.