ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பு: உச்சநீதி மன்றம் அனுமதி

தூதுக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்க உச்சநீதி மன்றம் இன்று (27.4.2021) அனுமதியளித்துள்ளது.

நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பல கட்சியினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இது தொடர்பான வேதாந்த நிறுவனத்தின் வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மூன்று தரப்பு வாதம்;

தமிழக அரசு வழக்கறிஞர்:  ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கண்காணிப்பு குழுவில் உள்ளூர் மக்கள் இடம்பெறுவது அவசியம்.

மத்திய அரசு வழக்கறிஞர்: உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜனை மத்திய அரசே எடுத்துக் கொள்ளும். உற்பத்தியாகவுள்ள உள்ள ஆக்ஸிஜனை தமிழகத்திற்கு தர முன்னுரிமை வழங்க முடியாது. பிற மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்ற நிலையில் மத்திய அரசால் மட்டுமே ஆக்ஸிஜனை பிரித்து தர முடியும்.

ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர்: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன்  உற்பத்தி கொட்டத்தை மட்டுமே இயக்குவோம். கண்காணிப்பு குழுவில் உள்ளூர் மக்கள் இடம் பெறக்கூடாது.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு:

நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுடன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி.  5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவில் மத்திய சுற்றுச்சூழல் பிரதிநிதிகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 3 சுற்றுச்சூழல் நிபுணர்கள் குழுவில் இடம்பெறுவார்கள்.  ஸ்டெர்லைட்டில் உள்ள தாமிர ஆலைக்கு யாரும் செல்ல கூடாது. மேலும் ஆலைக்குள் செல்லும் நபர்களின் விவரங்களை ஸ்டெர்லைட் நிறுவனம் கண்காணிப்பு குழுவிடம் வழங்க வேண்டும். ஆலையில் ஆக்ஸிஜன்  உற்பத்தி மட்டுமே  செய்ய வேண்டும்.