பழிபோடும் நோக்கத்தில் பாஜக கொடியுடன் பிரச்சனைகளை உருவாக்குவதாக தகவல்

-வானதி சீனிவாசன்

கோவையில் பாஜக மீது பழிபோடும் நோக்கத்தில் பாஜக கொடி மற்றும் டீசர்ட்டுகளுடன் பிரச்சனைகளை உருவாக்குவதாக தகவல் வந்துள்ளது என பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் தேர்தல் பணிமனையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உத்தரபிரதேச முதலமைச்சர் கோவை வருகையின் போது நடந்த விரும்பத்தகாத சம்பவத்தில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது போல தவறாக சித்தரித்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றனர் எனவும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்காதது பிரச்சினைக்கு காரணம் எனத் தெரிவித்த வானதி, சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு சதவீதம் கூட பாஜக வஞ்சகம் செய்யவில்லை என்றார். சிலர் பாஜக மீது பழிபோடும் நோக்கத்தில் பாஜக கொடி மற்றும் டீசர்ட்டுகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவதாக தகவல் வந்துள்ளது எனவும் எந்த மத உணர்வுக்கும் பாஜக எதிரான கட்சியல்ல எனவும் அவர் தெரிவித்தார். வாக்கு வங்கிக்காக பிரித்தாளும் சக்திகளை ஒதுக்க வேண்டும் எனவும் கல்வீச்சு சம்பவம் குறித்து உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் மறைந்த பாஜக தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ் அருண் ஜேட்லி குறித்து பேசியது அவரது அரசியல் அறியாமையை காட்டுகிறது எனவும் உதயநிதி ஸ்டாலினுக்கும் பாஜக குறித்து பேச எந்த அருகதையும் கிடையாது எனவும் விமர்சித்த வானதி, வாக்கு வங்கிக்காக பிரிவினையை தூண்டும் அரசியலை திமுக செய்வதாக குற்றம் சாட்டினார்.