வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் விடுமுறை  

வாக்குப்பதிவு நாளில் அனைத்து நிறுவனங்களும், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (கோவை) வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135 பி-ன் படி தேர்தல் நடைபெறும் ஏப்ரல் மாதம் 6ம் தேதியன்று அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

எனவே வணிகர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும்  தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன், பொது விடுமுறை வழங்க வேண்டும் எனவும், மேலும்  தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கப்படுவது தொடர்பாக பெறப்படும் குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.