வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்ட காலபைரவர் திருக்கோயிலில் சிறப்பு பூஜை

ஸ்ரீ அஷ்ட காலபைரவர் திருக்கோயிலில் இன்று வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு அபிஷேகம் ஆராதனை, அன்னதானம் நடைபெற்றது.

கோவை: எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் அந்த பைரவரை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது. அதில் வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் செல்வம் பெருகும் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும். அந்த வகையில் கோவை சிங்காநல்லூர் ராமானுஜர் நகர் பங்காரு லே-அவுட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட காலபைரவர் திருக்கோயிலில் இன்று (22.2.2021) வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமி குணானந்தா அவர்கள் தலைமையில் பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

காலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த பூஜையில் காலபைரவருக்கு பால், தயிர், திருமஞ்சள், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் மற்றும் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை ஊர் பொதுமக்களும் மற்றும் அரிமா செந்தில் குமார், வெங்கடேசன், கிருஷ்ணா மூர்த்தி ஆகியோர் வழங்கினார்.