தொழில்துறையின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்துஸ்தான் கல்லூரி புதிய பாடத்திட்டம்

கோவை: இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி இவ்வருடம் ஐபிஎம் (IBM) நிறுவனத்துடன் இணைந்து வருங்கால தொழில்துறையின் சவால்களை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய புதிய பாடத்திட்டத்தினை, சிறந்த கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்து வகுத்துள்ளது. டிஸ்ரப்டிவ் டெக்னலாஜிஸ் பபு ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் & மெஷின் லேர்னிங் மற்றும் டேட்டா சைன்ஸ் (Disruptive Technologies papu Artificial Intelligence & Machine Learning, IoT and Data Science) உள்ளடக்கிய பாடத்திட்ட துவக்க விழா மற்றும் ஐபிஎம் திட்ட ஆய்வு கருவியை ஒருங்கிணைந்து விநியோகிக்கும் நிகழ்ச்சி 6ம் தேதி சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், பேசுகையில் அடிப்படை அறிவு, மெட்டா அறிவு, தனிநபர் சுய ஒழுங்குமுறை ஆகிய மூன்று களங்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே வலியுறுத்தினார். மேலும் கோட்பாட்டு ஆய்வை விட நடைமுறை அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதிய கல்விக் கொள்கையை குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், வேலைவாய்ப்பு மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்தின் அறிவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, எதிர்கால போக்குகள் மற்றும் எதிர்கால பணிக்கான தொழில்நுட்பங்களின் தாக்கம் ஆகியவற்றை விளக்கினார். விழாவின் முக்கிய விருந்தினர் ஐபிஎம்-ன் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் பிரியா சதீஷ், திறன் மற்றும் அறிவு வெளிப்பாட்டை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.