கலவை மருத்துவத்துக்கு எதிர்ப்பு : இந்திய மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரதம்

கலவை மருத்துவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இந்திய மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள ஐ.எம்.ஏ. வளாகத்தில் நடந்த உண்ணா விரத ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ சங்க மாநில செயலாளர் ரவிக்குமார், மருத்துவ கல்லூரி மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை தலைவர் ராஜேஷ் பாபு இது குறித்து கூறியதாவது:- கலவை மருத்துவமான (மிக்‌சோபதி) ஆயுர்வேதம், சித்த மருத்துவம் படித்தவர்கள்  58 வகையான அறுவை சிகிச்சைகள் செய்ய மருத்துவ குழுக்கள் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சிகள் மூலம் எம்எஸ் பட்டம் கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்படுகிறது. போதிய அனுபவம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வதால் மக்களுக்கு ஆபத்தில் முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் ஒரு சில நோய் தொற்றுகளில் இருந்து நோயாளிகளை காக்க அவர்கள் எந்தவிதமான மருந்துகளை பரிந்துரைப்பார்கள். அவர்களால் எப்படி நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும். எனவே கலவை மருத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் 100 இடங்களில் உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 8 இடங்களில் உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தொடர்ந்து 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. மிக்சோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கக் கூடாது. இதனை வலியுறுத்தி பைக் பேரணியும் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.