மருதமலையில் பக்தர்களின்றி நடைபெற்ற திருக்கல்யாணம்

கோவை: கொரோனா பரவல் காரணமாக கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்வு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகளுடன் அபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்வு இன்று அதிகாலை பக்தர்கள் இன்றி நடைபெற்றது. 7 மணிக்குப் பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவில் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்காக கோவில் படிக்கட்டுகளில் மேலே செல்ல ஒரு வழியும் கீழே இறங்க மற்றொரு வழியும் அமைக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு உள்ள வாகனங்கள் மட்டும் அடிவாரத்திலிருந்து மலைக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. கோவில் வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.