போக்கிரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்

கோவை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் போக்கிரிகளை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட 15 காவல் நிலையங்களில் பராமரித்து வரும் போக்கிரிகள் பட்டியலில் உள்ள அனைவரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தேர்தலை முன்னிட்டு ரவுடிகள் மற்றும் போக்கிரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது எந்த வகையிலும் ரவுடி தனமான செயல்களில் ஈடுபடக்கூடாது, கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்ய கூடாது, வழிப்பறி செய்வதோ சொத்து சம்பந்தமான குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும், யாருக்கும் அடியாட்களாக இருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டத்திற்கு உட்பட்ட வழக்கமான பணிகளை மட்டுமே செய்து வர வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு முன்னர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை துணை ஆணையர் ஸ்டாலின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அவர்களிடம் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. மேற்படி நபர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பப்பட்டனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.