சங்கரா கல்லூரியில் இணையவழி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவை: சங்கரா கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டக் குழுவின் சார்பில் வாழ்க்கை முறைக்கான ஊட்டச்சத்து என்னும் தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இணையவழியில் நடைபெற்றது. சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் முதல்வர் ராதிகா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதனைக் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் பற்றியும், இன்றைய நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அவரது சிறப்புரையில் மாணவ, மாணவியர் அனைவரும் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் மற்றும் ஊட்டச்சத்தின் நன்மைகள் பற்றிய விவரங்களைப் பல நடைமுறை எடுத்துக்காட்டுகள் மற்றும் நிகழ்வுகள் மூலம் விரிவாக எடுத்துரைத்தார். இது அனைத்து மாணவ, மாணவியருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் அனைவரும் பின்பற்றக் கூடிய வகையிலும் இருந்தது. இந்நிகழ்ச்சியில் 150 மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.