திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் நகராட்சி கலையரங்கத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து தூய்மை பாரத திட்ட தூதுவர்கள், தூய்மை பாரத பரப்புரையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று 05.12.2020 மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது, கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முன்னேற்றத்திற்காக மக்கும் குப்பை, மக்காத குப்பை என வார்டு வாரியாக மக்கள் தரம் பிரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை மற்றும் தெரு ஓரங்களில் குப்பைகள் கொட்டாமல் இருக்க வேண்டும். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்திட வேண்டும். நுண்ணுயிர் கூடம் செயல்பாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கும் கழிவுகளையே கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும். வீட்டிலேயே மக்கும் குப்பைகளை வைத்து உரம் தயாரித்து வீட்டுத் தோட்டம் அமைத்து மாநகராட்சிக்கு வரும் குப்பைகளின் அளவை குறைக்க வேண்டும். தோட்டக்கழிவுகளை அறிவியல் முறைப்படி அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்காத குப்பைகளை தனியாக பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும்.

வெள்ளலூரில் வரும் குப்பையின் அளவை குறைக்க வேண்டும். வெள்ளலூரில் இவ்வளவு நாட்களாக கொண்டுவந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். வணிக நிறுவனங்களிலிருந்து வரும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை தனியாக பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள தூய்மை பாரத தூதுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்கிய ஆணையாளர் தூய்மை பாரத தூதுவர்களிடம் குப்பை இல்லாத வார்டு குப்பைத் தொட்டி இல்லாத வார்டு உருவாக்குவது குறித்து அதற்குண்டான நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசணை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, மாநகராட்சிப்பொறியாளர், லட்சுமணன், மாநகர நல அலுவலர் ராஜா, செயற்பொறியாளர் (ஸ்மார்ட் சிட்டி) சரவணக்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் ரூபா குணசீலன், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள், ராக்ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.