மோடியின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க கோரி மனு

கோவையில் பா.ஜ.க. பட்டியல் அணி பிரிவினர் பாரத பிரதமர் மோடியின்  படத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்க கோரி கொடுத்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர்  உறுதி கூறியிருப்பதாக  பட்டியல் அணி பிரிவின் மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவை பா.ஜ.க பட்டியல் அணி பிரிவின் தலைவர் விவேக் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவில், இந்திய நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவி வகித்து, உலக நாடுகள் வியக்கும் வண்ணம் அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் வகையில் சிறப்பானதொரு நல்லாட்சியை கொடுத்து வருவதாகவும். தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமரின் திருவுருவப்படம் வைக்க வேண்டும் என தமிழக அரசின் 1978 ம் ஆண்டு பிறப்பித்த ஆணைப்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்தும் வகையில் பிரதமர் மோடியின் திருவுருவப் படத்தினை, வைக்க கேட்டுக்கொள்வதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மனு அளிக்க வந்த பட்டியல் அணி பிரிவின் மாவட்ட தலைவர் விவேக் பேசுகையில், கடந்த 3 ம் தேதி இதே மனுவை அளித்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் விரைவில் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக அவர் தெரிவித்தார். அவருடன் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவினரும் கலந்து கொண்டனர்.