‘ஒட்டுமொத்த சினிமாவிற்கு ஒரே எதிரி’

நடிப்புடன் இயக்கத்தையும் திறமையாகக் கொண்டவர்கள் திரையுலகில் ஒருசிலரே. அவர்களில் ஒருவர்தான் நடிகர் மற்றும் இயக்குனர் வேல்முருகன். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களைக் காண்போம்.

‘‘பல தமிழ்ப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் பள்ளிப் பருவத்தில் இருந்தே சினிமா மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. இதற்குக் காரணம் என் தாத்தா சண்முகம். அவர் ஒரு நாடக நடிகர். பல மேடை நாடகங்களில் நடித்தவர். அவருடைய வாரிசு என்பதால் என் ரத்தத்தில் நாடகம், சினிமா மீது ஒரு தனிப்பட்ட ஆசை இருந்தது. எல்லா தரப்பட்ட சினிமாப் படங்களையும் பார்த்து எனக்குள் இருக்கும் சினிமாவை உணர்ந்தவன் நான். திரையுலகில் என்னை அதிகமாக ஈர்த்த இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ். அவரின் நடிப்பு மற்றும் திரைக்கதை என்னை வியக்கச் செய்துள்ளது. அதற்குப் பிறகு நானும் அவரைப்போல் ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

வல்லரசு பட இயக்குனர் மகாராஜன் உதவியால் சினிமாவிற்குள் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு என் மாமா சங்கிலி முருகன் தயாரித்த அத்தனைப் படங்களிலும் பணியாற்றினேன். பிறகு இயக்குனர் ஏ.ஜெகநாதனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தேன். இயக்குனர் சீமானிடம் பாஞ்சாலகுறிச்சி படத்தில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரஞ்சித், வடிவேலு, செந்தில் நடித்த ‘நேசம் புதுசு’ படத்தை இயக்கினேன். ‘ஆட்டோகிராப்’ படத்தில் நடிக்க இயக்குநர் சேரன் என்னை அழைத்தார். அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது நடிகனாக உயர்ந்துள்ளேன். இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல மாற்றங்களைப் பார்த்து வருகிறேன்.

தற்பொழுது இருக்கும் சினிமா உலகம் வேறு. ஒரு காலகட்டத்தில் சினிமா ஒரு பொழுதுபோக்கு விஷயமாக இருந்தது. அதனால் திரையரங்கைத் தேடி மக்கள்கூட்டம் வரத் தொடங்கியது. ஆனால், இப்பொழுது இருக்கும் சினிமா அப்படி கிடையாது. தற்போது எங்களுக்குப் (திரையுலகுக்கு) பொதுவான ஒரு வில்லன் இருக்கான். அது வேறு யாரும் இல்லை, திருட்டு விசிடிதான். தமிழக அரசு பார்வையிட்டு இதை அறவே ஒழிக்க வேண்டும்.

நீங்கள் என்னிடம் கேட்கலாம். திருட்டு விசிடியை ஒழித்துவிட்டால், இணையத்தளத்தில் வெளியீடு செய்பவர்களை என்ன செய்வது என்று. அதற்கு மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். சினிமா நமக்கு சம்மந்தம் இல்லை என்று எந்த அரசாங்கமும் சொல்லிவிட முடியாது. சினிமாவினால் அரசங்காத்துக்கு வரிப் பணம் செல்கிறது. இதனால் அரசாங்கத்திற்குப் பல பயன்கள் உண்டு. இதனை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டால் எங்களைப் போல் உள்ள பல சினிமாக் கலைஞர்கள் நன்றாக இருப்பார்கள்.

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்கள் பலர் வந்துகொண்டு இருக்கின்றனர். அவர்கள் எடுத்த குறும்படங்களின் மூலமாக திரைத்துறைக்கு உள்ளேவர ஒரு புது வழி அமைந்துள்ளது. இது சினிமா உலகத்துக்கு நல்ல விஷயம்தான். எங்கள் காலத்தில் சிறுகதைகள்தான் எங்களுக்குக் குறும்படம். அப்போதெல்லாம் நாங்கள் எழுதிய சிறுகதைகள் பத்திரிகையில் வந்து இருக்கின்றதா என்றுதான் கேட்பார்கள். ஆனால், சினிமாவைப் பொறுத்த வரைக்கும் தினசரி ஒவ்வொரு நாளும் நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான்  நம்முடைய படைப்புக்கு ஒரு தனி அங்கீகாரம் கிடைக்கும். எத்தனை பிரச்னை சினிமா உலகில் இருந்தாலும் என்றைக்கும் சினிமாவை யாராலும் அழிக்க முடியாது. வாழ்க்கை என்பது சந்தோஷமாக வாழ்வதற்கே. வரும் புத்தாண்டில் நீங்கள் எதிர்பார்த்த வாழ்க்கை அமையட்டும்.