‘மக்கள் பிரச்சனைகளைப் பேசும் நயன்தாரா’

நயன்தாரா நடித்து, கோபி நியானர் இயக்கி கடந்த வாரம் வெளியான படம்தான் ‘‘அறம்’’. படம் வெளியாவதற்கு முன்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். கதாநாயகன் இல்லாமல், கதாநாயகியை மட்டும் வைத்து படம் எடுத்தாலும் வெற்றி சாத்தியமாகும் என அறம் படம் நிரூபித்துவிட்டது.

படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் இருக்கும் சுவாரசியத்தை பார்ப்போம். விவசாயம் இல்லாமல், குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் ஏழ்மையான குடும்பத்தில் இருக்கும் ஒரு சிறு குழந்தை ஆள்துளை கிணற்றிற்குள் தவறி விழுந்துவிடுகிறது. இந்த விஷயம் தீயாக பரவ, அங்குவரும் மாவட்ட ஆட்சியர் அந்த குழந்தையை எப்படி பல இன்னல்களுக்கு நடுவில் காப்பாற்றுகிறார் என்பதை அரசியலில் இருக்கும் ஓட்டைகள், அரசாங்க பணியாளர்களின் அலட்சியம் ஆகியவற்றை ஆழமான திரைக்கதையில் இயக்குநர் காண்பித்து இருக்கிறார்.

ஆட்சியர் வேடத்தில் நயன்தாரா மிக கட்சிசிதமாக நடித்திருப்பது படத்தின் மிகப்பெரிய பக்கபலம். அடுத்தது, பின்னணி இசை குறித்து கண்டிப்பாக கூற வேண்டும். இசை அமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் வேகத்துக்கு நிகராக இசையமைத்து இருப்பது படத்துக்கு மேலும் மெருகூட்டி விட்டது.

கிராமங்களில் இருக்கும் தண்ணீர் பிரச்சனை, மோசமான சாலைகள் என அத்தனை இடருபாடுகளையும் பல காட்சிகளில் இயக்குநர் தெளிவுபடுத்தி இருக்கிறார். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை எப்படி காப்பாற்றலாம் என்று மையக் கருவை வைத்து 1990 இல் மலையாளத்தில் ‘மல்லோட்டி’ என்ற படம் வெளியானது.

அந்த படத்துக்கும் ‘அறம்’ படத்துக்கும் வித்தியாசம் என்னவென்றால், மல்லோட்டி படத்தில் அரசியல் சார்ந்த தகவல்கள் கிடையாது. ஆனால் அறம் படத்தில் நம்மச்சுற்றியுள்ள மக்கள் சார்ந்த பிரச்னைகளை நமக்கு காட்டியுள்ளார் இயக்குநர் கோபி நியானர். அதனால் நிச்சயம் அவருக்கு நமது பாராட்டுக்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். அறத்துக்கு பிறகாவது  மக்கள் பிரச்னை தீருமா என்பதை, பொறுத்து இருந்து பார்க்கலாம்.

— பாண்டிய ராஜ்