கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி பீளமேடு பகுதியில் உள்ள கல்லூரி நகரில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று வெப்பமானி கொண்டு உடல் வெப்பநிலை கண்டறிதல் மற்றும் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவரும் பணிகளை குறித்து கேட்டறிந்தும், அப்பகுதியில் நடைபெற்றுவரும் மருத்துவ முகாமினை பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மருத்துவ முகாமில் பாரிசோதனைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பிரிவில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மக்கும், மக்கா குப்பைகள் மற்றும் அபாயகரமான குப்பைக் கழிவுகளை தூய்மைப்பணியாளர்களிடம் தனித்தனியாக பிரித்து குப்பைத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டுவருவதை பார்வையிட்ட ஆணையாளர் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் நீர் தேங்காமல் சுத்தம் செய்து கொசு மருந்து தெளித்து கொசு உற்பத்தியாகமல் இருக்க வேண்டுமென தூய்மைப்பணியாளர்களிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து உப்பிலிபாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த ஆணையாளர் செவிலியர்களிடம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் விபரங்கள், சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பரிசோதனை விபரங்களைக் கேட்டறிந்து, சுகாதார நிலையத்திற்கு அடிப்படை வசதிகள் ஏதேனும் தேவைப்படுகின்றனவா என கேட்டறிந்த ஆணையாளர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு உற்பத்தியில்லாமல் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட சுகாதார பணியாளர்களிடம் தெரிவித்தார்.