சொத்தை பெற்றுக் கொண்டு பெற்றோரை கைவிட்ட மகன் : அதிரடி நடவடிக்கை எடுத்த வருவாய் கோட்டாட்சியர்..!

கோவையில் சொத்தை பெற்றுக்கொண்டு தாயை பராமரிக்க தவறிய மகனின் பத்திரப்பதிவை ரத்து செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர்.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த அம்பேத்கர் வீதி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லட்சுமி (75). கண்ணன் உயிரிழந்துவிடவே லட்சுமி தனது பிள்ளைகள் ஆதரவில் வாழ்ந்து வந்த சூழலில், இவருக்கு சொந்தமான 4 செண்ட் இடத்தை மகன் சசிகுமார் (42) பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

ஆனால், அதன் பிறகு தாயை பராமரிக்க தவறியுள்ளார். இது குறித்து வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்-இடம் லட்சுமி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். அப்போது சசிகுமார் ,சொத்தைப் பெற்றுக்கொண்டு தாயை பராமரிக்க தவறியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் – 2007 பிரிவு 23 உட்பிரிவு 1ன்படி
சசிகுமாருக்கு எழுதிக்கொடுத்த சுமார் ரூ.60 லட்சம் மதிப்புடைய சொத்து தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.