புதிய அரசு மகளிர் கலை கல்லூரி சேர்க்கை துவக்கம்

கோவை புலியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2020 – 21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

அரியலூர், கரூர், விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை மற்றும் கோவை என ஏழு இடங்களில் புதிதாக அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது‌. இதில் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கபட்டுள்ளது.

இந்த நிலையில் இக்கல்லூரியின் 2020 – 2021 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கை துவக்க விழா நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்‌.பி. வேலுமணி கலந்து கொண்டு மாணவியருக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கி சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

முன்னதாக விழா மேடையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்து வருகிறது. விமானநிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் , பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள், 5 அரசு கல்லூரிகள், அத்திக்கடவு அவினாசி திட்டம், பில்லூர் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் என பல்வேறு திட்டங்களை கோவை மாவட்டத்தில் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் போது ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார்.

மேலும், புலியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்கட்டமாக 5 பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைப் பொருத்து கூடுதல் பாடப்பிரிவுகள் வருங்காலங்களில் துவங்கப்படும்‌. தனியார் கல்லூரிகளில் 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கல்வி கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டிய பாடப்பிரிவுகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2000 ரூபாய் கட்டணத்தில் படிக்க இயலும் என்றார்.