மருத்துவ சிகிச்சைக்கு உதவியாக கும்கி அழைப்பு

மேட்டுப்பாளையத்தில் காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவிற்கு உதவியாக கும்கி யானை சுயம்பு சாடிவயல் முகாமிலிருந்து மேட்டுப்பாளையம் அழைத்து வரப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச் சரகத்தில் நெல்லித்துறை வனப்பகுதியில் காலில் காயத்துடன் ஒரு ஆண் காட்டு யானை கடந்த ஆறு மாதங்களாக சுற்றித் திரிந்து வந்தது. நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை பலாப்பழத்தில் வைத்து யானைக்கு வழங்கி வந்த வனத்துறையினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் யானையின் உடலில்  காயங்கள் ஏற்பட்டு மேலும் உடல் நலம் குன்றிய நிலையில் யானை நெல்லிமலை வனப்பகுதியில் சோர்வுடன் நடமாடி வருகிறது. அந்த யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கோவை மாவட்ட வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

காட்டு யானைக்கு  மயக்க ஊசி செலுத்தி  சிகிச்சை அளிக்க மருத்துவ குழு முடிவு செய்துள்ளது. எனவே காட்டு யானையை கட்டுப்படுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவிற்கு உதவியாக கோவை சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் டாப்சிலிப் முகாமில் இருந்து கும்கி யானை கலீம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ள வனத்துறையினர் இரண்டு யானைகளும் வந்த பிறகு உரிய திட்டமிட்டு காட்டு யானையை மலைப்பகுதியில் இருந்து சமதளப் பகுதிக்கு கொண்டு வந்து அதற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி யானைக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.