தனியார் செவிலியர் கல்லூரி நிர்வாகங்கள் களப்பணியாற்ற ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தனியார் ஆய்வகங்கள் மற்றும் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கிருஷ்ணா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார், மாநகராட்சி நகர் நல அலுவலர் ராஜா தனியார் கொரோனா தொற்று பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகள், தனியார் செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதித்து வரும் தனியார் ஆய்வகங்கள் தங்களின் ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படும் மாதிரிகளின் முடிவுகளை தாமதமின்றி வெளியிட வேண்டும் எனவும், மாதிரிகள் பெறப்பட்டவுடன் 12மணி நேரத்திற்குள் முடிவுகளை தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அவற்றில் குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும், உடனடியாக அவர்களின் தொடர்பு விவரத்தினை சுகாதாரத்துறை மற்றும் கோவை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து ஆய்வகங்களிலும் பல்ஸ்ஆக்சி மீட்டர் மூலம் அவர்களை அவசியம் பரிசோதனை செய்துகொள்வதுடன், அந்த விவரத்தையும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினை குறைத்திடும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைக்கு தனியார் பரிசோதனை மையங்கள் மிகுந்த ஒத்துழைப்பு தரவும், அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலித்திடவும் தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று குறித்த பாதுகாப்பு வழிமுறைகளையும் தெரிவிக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரி நிர்வாகங்கள், கொரோனா தொற்று தடுப்பு பணி மற்றும் அதனோடு தொடர்புடைய பணிகளுக்கு தகுதியான, விருப்பமுள்ள செவிலியர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களை ஈடுபடுத்திட முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தொற்று பரிசோதனை ஆய்வு முடிவுகளை உடனடியாக பரிசோதித்து கண்டறிய செவிலியர் பயிற்சி பள்ளிகளில் பட்டம் பெற்ற மாணவ மாணவியர்கள், தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் களப்பணியாற்ற அழைக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கான தங்கும் இடங்கள், உணவு, பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும். நம் அனைவரின் ஒரே இலக்கு கோவை மாவட்டத்தினை கொரோனா தொற்றில்லா மாவட்டமாக மாற்றுவதேயாகும். தொடும் தூரத்தில் உள்ள அந்த இலக்கினை அடைய அனைவரும் தங்களின் மேலான ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.