கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட முகாம் அலுவலகத்தில் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (01.09.2020) கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் மற்றும் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாவது, உலகளவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளித்து வருவதால்,  விரைவாக குணமடைந்து வருகிறார்கள். சிகிச்சைக்குபின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக்குறைவாகவும் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக முதல்வர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதுடன், தேவையான தளர்வுகளுடன் பொது முடக்கத்தை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி, தற்போது பொதுபோக்குவரத்து  மாவட்டங்களுக்குள் அனுமதிக்கபட்டுள்ளதால், பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். பயணிகள் ஏறுவதற்கு ஒரு வழியும், இறங்குவதற்கு ஒரு வழியும்  பயன்படுத்தவேண்டும். சமூக இடைவெளியிட்டு பயணம் மேற்கொள்வதையும், கண்காணித்திடவேண்டும்.

மேலும், பிற மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், தொழில் துறையினர் மற்றும் பொதுமக்களும் தங்கள் பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தராமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும்,  கண்காணித்திட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள்,தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகள், ஆக்சிஜன் வசதிகள், மருத்துவ வசதிகள் போதுமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை கொண்டு குறையின்றி சிகிச்சை கிடைப்பதை கண்காணிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவகல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், கோவிட் கேர் மையங்கள் ஆகியவற்றில்; தேவைகளின் அடிப்படையில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

கோவை மாவட்டத்தில் 7,327 சிறப்பு மருத்து முகாம்கள் நடத்தப்பட்டு 8 லட்சத்து 76 ஆயிரத்து 58 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தினந்தோறும் மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தேவையற்ற அச்சத்தை போக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

மேலும், பொது மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப் பிடிக்க வேண்டும். என அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளராசு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) காளிதாசு, இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.